ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும்

வியாழன் ஏப்ரல் 02, 2020

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக ஐ.நா. சபையிலும் புகார் செய்தது.

காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறி அதுபற்றி ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக சீனாவின் ஆதரவையும் கேட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே சீனா செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சீனா நிராகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை மந்திரி குரேஷி கடந்த 9-ந்தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் மற்றும் சீனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், காஷ்மீரில் மனித உரிமைகள், கல்லறையில் சிதைக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

எனவே காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐ.நா.சபையில் அவசரமாக ஆலோசனை நடத்த வேண்டும் கூறி உள்ளார். பாகிஸ்தான் எழுதிய கடிதத்தை சீனா நிராகரித்து இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதேபோல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கொரோனா வைரசை தடுப்பது தொடர்பாக இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் கோரிக்கையை சீனா நிராகரித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.