அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்! 

வெள்ளி சனவரி 24, 2020

வணக்கம் பிள்ளையள்.
எல்லோருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.

அண்டைக்கு இப்படித் தான் பெரிய வில்லங்கமாகப் போச்சுது. ஸ்புறோவில் உள்ள தமிழ் கடைப் பக்கம் வெளிக்கிட்டுப் போகேக்குள்ளை எனக்குத் தெரிஞ்ச பெடியன் ஒன்றைப் பார்த்துத் ‘வணக்கம் தம்பி. உங்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்’ என்று சொன்னான்.

உடனே பொடியன் என்னை முறைத்துப் பார்த்து விட்டு, ‘இன்றைக்குத் தைப்பொங்கல் மட்டுமில்லை ஐயா, தமிழ்ப் புத்தாண்டும் கூட. இன்றைக்கு 2051ஆவது திருவள்ளுவர் ஆண்டு பிறந்திருக்குது.

உது தெரியாமல் சும்மா வெறும் தைப்பொங்கல் வாழ்த்து மட்டும் சொல்லுறியள்’ என்று சீறினவன்.
எனக்கு ஒரு கணம் தலை விறைச்சுப் போச்சுது.

பெடியன் சொன்னதில் உண்மை இருக்குது தான். ஆனால் இப்படித் தான் போன வருசம் ஸ்புறோவில் எங்கடை பக்கத்து அடுக்குமாடித் தொடரில் இருக்கிற பூரணம் மச்சாளைக் கண்டதும் ‘இனிய தைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்று சொன்னனான். அவ்வளவு தான் கிழவி என்னை இளக்காரமாய் பார்த்தது.

111

முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிறகு கறுப்பு டை அடிச்ச தன்ரை நரைச்ச தலையை ஒரு சிலிர்ப்பு சிலுப்பிக் கொண்ட தான் ஏதோ ஒரு டிங்கிரி நோனா என்கிற தோரணையில் கிழவி சொல்லிச்சுது: ‘பெருமான் உமக்கு என்ன லூசே? இன்றைக்குத் தைப் பொங்கல். புதுவருசம் சித்திரையில் வருகுது. சும்மா தைப்பொங்கலைப் புது வருசம் என்று சொல்லி என்னை சைட் அடிக்கலாம் என்று நினைக்கிறீரோ?’

எனக்கு உடனேயே தலை கிறுகிறுத்துப் போய்ச்சுது. பேய் பூரணத்திற்கு தான் ஏதோ இப்பவும் குமரி என்று நினைப்பு. ஆளுக்கு வயது எழுபத்தைந்து: ஆனால் நினைப்பென்றால் தனக்கு இருபத்தைந்து வயது என்று.

‘அன்னாசி சொன்னதாம் பலாப்பழத்தைப் பார்த்து, இருந்தாலும் நீ ரொம்ப சொர சொரப்பு’ என்கிற மாதிரித் தான் அவாவின்ரை கதை உந்த இரண்டு வில்லங்கமும் வேண்டாம் என்று தான் ஆரம்பத்திலேயே ‘தைத்திருநாள் வாழ்த்துக்கள்’ என்று பொதுவாக சொன்னேன் பிள்ளையள்.

ஆனாலும் பிள்ளையள் உந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேணும் பாருங்கோ. ‘அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்’ என்கிற மாதிரி இன்னும் எத்தினை காலத்திற்குத் தைப்பொங்கல் நாளில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லாமல் இளந்தாரிப் பெடியளிட்டைப் பேச்சு வாங்கிறதும், பிறகு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி என்னை மாதிரியான நைன்ரியளிட்டை பேச்சு வாங்கித் திரியிறதும்?

ஒன்று சொல்லுவன் பிள்ளையள். தைப்பொங்கல் பரம்பரை பரம்பரையாக நாங்கள் கொண்டாடுகின்ற ஒரு பண்டிகை. இந்து சமயச் சடங்குகள் கடந்த ஒன்று அது. அந்த நாட்களில் ஊரில் நாங்கள் பொங்கல் விழா செய்யேக்குள்ளை எங்கடை சுபி முசுலிம் சகோதரர்களும், கிறிஸ்தவ பிள்ளையளும் அதில் பங்குபற்றுகிறவையள். அந்த நேரத்தில் சூரிய வழிபாட்டை நாங்கள் தவிர்த்துக் கொள்ளுவம். ஏனென்றால் இயற்கையை வழிபடுகிறது தங்கடை சமயத்திற்கு முரணானது என்று பொங்கல் விழாவில் அவையள் பங்குபற்றாத நிலை வரக்கூடாது என்பதற்காக.  

அந்த அளவுக்கு விட்டுக் கொடுப்போடு நடந்த நாங்கள், இப்ப எதுக்கு தைப்பொங்கல் நாளில் தமிழ்ப் புத்தாண்டா? அல்லது சித்திரை முதலாம் நாளில் தமிழ்ப் புத்தாண்டா? என்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறோம்?

சங்க காலத்து இலக்கியங்கள் எதிலும் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதாகப் பதிவுகள் இல்லை பிள்ளையள். ஆனால் தை மாதத்தில் தமிழர்கள் தைநீராட்டு விழா என்று ஒரு பண்டிகையைக் கொண்டாடியதாக புறநானூறு, கலித்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் பதிவுகள் இருக்குது பாருங்கோ. இது ஒரு முக்கிய விழாவாக அந்த நாட்களில் இருந்திருக்குது. ஆனால் இது ஒரு புத்தாண்டாக கொண்டாடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இது போக அந்த நாட்களில் எங்கடை வரலாறுகள் எல்லாம் அரசர்களை மையப்படுத்தித் தான் எழுதப்பட்டது. ஒரு அரசன் ஆண்ட காலத்தை வைச்சுத் தான் ஆண்டுகளை எங்டை ஆட்கள் பதிவு செய்து வைச்சவை.

அது போல் சித்திரை மாதத்தில் தமிழர்கள் இந்திர விழா எடுத்ததாக சிலப்பதிகாரத்தில் எழுதிக் கிடக்குது. ஆனால் சிலப்பதிகாரம் சங்க காலத்தின் இறுதிக் கட்டத்தில் எழுதப்பட்டதால் தைநீராட்டு விழாவைத் தான் அதுக்கு முந்திய விழாவாக நாங்கள் கொள்ள வேண்டும்.

அதுக்குள்ளை இன்னுமொரு வில்லங்கமும் இருக்குது பிள்ளையள். கிட்டத்தட்ட எழுநூறு வருசத்துக்கு முதல் சோழ மன்னர்கள் காலத்தில் தொல்காப்பியத்திற்கு உரை எழுதின நச்சினார்க்கினியர் என்கிற புலவர் ஒரு ஆண்டு ஆடியில் முடிஞ்சு ஆவணியில் தொடங்குவதாக எழுதியிருக்கிறார். ஒரு வேளை சிறுபோக நெல் அறுவடை ஆடியில் முடியிறதால் அப்படி ஒரு நடைமுறை நச்சினார்க்கினியரின்ரை காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்களால் அமுல்படுத்தப்பட்டதோ தெரியவில்லை.

உதுக்குள்ளை உந்த சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுகின்ற நடைமுறை மதுரையை ஆண்ட தெலுங்கு நாயக்கர் காலத்தில் தான் தமிழரிடம் அறிமுகம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகுது.

சித்திரைப் புத்தாண்டு பற்றி திருக்கோணச்சரத்தை இடிச்ச போர்த்துக்கேயரின்ரை குறிப்புக்களிலும், டச்சுக்காரர் காலத்தில் மாதகல் மயில்வாகனப் புலவர் எழுதின யாழ்ப்பாண வைபவமாலையிலும் தான் பார்க்க முடியுது.

எது எப்படியோ, தைப்பொங்கல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக 1921ஆம் ஆண்டுஅறிவிக்கேக்குள்ளை, தமிழ்நாட்டில் ஒரு பக்கத்தில் ஆங்கிலேயர்களின் மேலாதிக்கமும், மறுபக்கம் வடநாட்டவரின் சடங்குகளும் மேலோங்கியிருந்திச்சுது.

இப்படியே போனால் தமிழரின்னை தொன்மை அழிஞ்சு போய் விடும் என்று மனுசன் பயந்து போனார்.

அதுக்குப் பிறகு தான் ஏனைய தமிழ் அறிஞர்களோடு கதைச்சுத் தைப்பொங்கல் நாளைத் திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கமாக அவர் பிரகடனம் செய்தவர். பிறக்கும் போது அவரின்ரை பெயர் வேதாச்சல சாஸ்திரி. ஆனால் அதை மறைமலை அடிகள் என்று தூய தமிழுக்கு மனுசன் மாற்றினர் என்றால் பாருங்கோவன் மனுசனின்ரை தமிழ்ப்பற்றை.

இதுக்குள்ளை தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தீண்டாமை தலைவிரித்தாடின காலம் அது. சாதிக் கொடுமை காரணமாக ஆலயங்களுக்குள் பெரும்பாலான பாமரத் தமிழர்கள் நுழைய முடியாத சூழலும் இருந்தது.  இப்படியான நிலையில் சமயச் சடங்குகளோடு சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவதை விட, தைப்பொங்கல் நாளில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடுவது எவ்வளவோ மேல் என்று மனுசன் நினைச்சிருப்பார். அதை விட தைப்பொங்கல் நாளில் கோயிலுக்குப் போகிற பிரச்சினையும் இருக்கவில்லை: அதனால் தீண்டாமை என்ற பிரச்சினையும் வரவில்லை.

ஆனால் அந்த இடத்தில் மறைமலை அடிகள் ஒரு தவறு செய்தவர் பாருங்கோ. பஞ்சாங்க முறையை வைத்துத் திருவள்ளுவர் ஆண்டை அவர் கணிச்சது தான் அந்தத் தவறு பிள்ளையள். ஒரு வேளை அந்தக் காலத்தில் பஞ்சாங்க வழிதான் மக்கள் ஏற்கும் வழியாக இருந்திருக்கலாம்.
இந்தப் பஞ்சாங்க முறையை வைச்சுத் தான் இப்ப எங்கடை ஆட்கள் தைப்பொங்கல் நாளில் புத்தாண்டு கொண்டாடுகிறதா? அல்லது சித்திரை முதலாம் நாளில் புத்தாண்டு கொண்டாடுகின்றதா? என்று முரண்படுகீனம்.

அதுக்குள்ளை வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்று இரண்டு பஞ்சாங்கம் வேறை. சில வேளைகளில் வாக்கியப் பஞ்சாங்கத்தில் தை 14ஆம் நாள் தைப்பொங்கல் வந்தால், திருக்கணித பஞ்சாங்கத்தில் அதுக்கு முதல் நாள் அல்லது அடுத்த நாள் தைப்பொங்கல் வரும்.

உது போதாது என்று ஊருக்கு ஒரு நேரம், வெளிநாட்டுக்கு ஒரு நேரம் என்று இப்ப ஐயர்மார் கணிக்கிறதில், சில வேளைகளில் ஒரே பஞ்சாகத்திலேயே இரண்டு வெவ்வேறு நாட்களில் பொங்கல் வருகுது.

இப்படித் தான் இரண்டு மூன்று வருசத்துக்கு முதல் தை 14ஆம் நாள் தைப்பொங்கல் வர என்ரை பேரன் தன்ரை பள்ளிக்கூடத்தில் உள்ள வெள்ளைக்கார நண்பர்களிடம் அண்டைக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லியிருக்கிறான்.

அடுத்த வருசம் பார்த்தால் 14ஆம் திகதி அவங்கள் இவனுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல, இவன் பதிலுக்குச் சொல்லியிருக்கிறான், ‘இந்த வருசம் புத்தாண்டு 15ஆம் திகதி வந்திருக்குது’ என்று. அவ்வளவு தான்: எல்லோரும் குழம்பிப் போனாங்கள்.

இப்படியான குழப்பங்களுக்கு முடிவு கட்டுகிறதுக்கு பஞ்சாங்கத்தைத் தவிர்த்து தைப்பொங்கலுக்கும், திருவள்ளுவர் ஆண்டின்ரை தொடக்கத்திற்கும் பொதுவான ஒரு நாளை எங்கடை ஆட்கள் தெரிவு செய்கிறது நல்லது. மாவீரர் நாள் கார்த்திகை 27ஆம் நாள் வருகிற மாதிரி தைப்பொங்கல் தை 14ஆம் நாளிலோ அல்லது 15ஆம் நாளிலோ வருவதாக இருக்கலாம். ஆனால் அது எப்பவும் ஒரே நாளில் வர வேணும்.

அதை விடத் திருவள்ளுவர் ஆண்டு நாட்காட்டியைத் தங்கடை நாளாந்த பயன்பாட்டில் மக்கள் வைச்சிருக்கிற மாதிரி அது இலகுபடுத்தப்பட வேண்டும். அதை விட்டுப் போட்டு பொங்கல் எப்ப வருகுது என்று தெரியாமல் பஞ்சாங்கம் பார்க்கிறதும், குழப்பம் வந்தால் விளக்கம் கேட்டு ஐயரிட்டையும், சாத்திரியாரிட்டையும் சனம் ஓடுகிறது தொடர்ந்தால் திருவள்ளுவர் ஆண்டைப் புத்தாண்டாக கொண்டாடுகிறது கயிட்டம் தான்.

நீங்களே யோசிச்சுப் பாருங்கோ. சில வேளைகளில் வெளிநாடுகளில் ஒரு நாளிலும், ஊரில் இன்னொரு நாளிலும் தைப்பொங்கல் கொண்டாட்டம் நடந்திருக்குது. அப்படி என்றால் தமிழ்ப் புத்தாண்டு என்ன இரண்டு வெவ்வேறு நாட்களிலேயே தமிழர்களுக்குப் பிறக்கிறது பிள்ளையள்?

அதுக்காகப் பஞ்சாங்கத்தைக் கைவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒன்றில் பஞ்சாங்கத்தில் உள்ள குறைகளை நாங்கள் திருத்த வேண்டும் அல்லது திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கத்தைப் பஞ்சாங்க அடிப்படையில் பார்க்கிறதை நாங்கள் நிற்பாட்ட வேண்டும்.

இல்லை என்றால் கடைசியில் ஆங்கிலத் தை மாதம் 1ஆம் நாளில் உலகப் பொதுப் புத்தாண்டும், தைப்பொங்கல் நாளில் திருவள்ளுவர் புத்தாண்டும், சித்திரை 1ஆம் நாள் சித்திரைப் புத்தாண்டும், பிறகு ஆவணி 1ஆம் நாள் நச்சினார்க்கினியர் புத்தாண்டும் என்று ஒரு வருசத்தில் நான்கு புத்தாண்டுகளைத் தமிழர்கள் கொண்டாடுகின்ற நிலை தான் வரும்.

குஜராத்காரங்களைப் பாருங்கோ. அவங்களுக்கு ஒரு புத்தாண்டு தான். எங்கடை ஈழத்தமிழ் மன்னன் இராவணனை இராமர் வெற்றிகொண்டு அயோத்தி திரும்பி வந்த தீபாவளி நாள் அவையளுக்குப் புத்
தாண்டு.

ஆனால் எங்களுக்கு மட்டும் என்னத்துக்கு ஒரு வருசத்தில் மூன்று, நான்கு புத்தாண்டு? இப்படியே போனால் கொஞ்சக் காலத்தில் வெளிநாடுகளில் தீபாவளியும் தமிழ்ப் புத்தாண்டாகினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.  

ஆனபடியால் தான் தைப்பொங்கல் நாளைப் பொதுத் தமிழ்ப் புத்தாண்டாக நாங்கள் கொண்டாடுறதுக்கு ஏதுவாக சில சீர்திருத்தங்களைச் செய்ய வேணும் பிள்ளையள். ‘அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்’ என்று அந்தக் காலத்தில் சும்மாவே சொல்கிறவையள்? சரி, வரட்டே?

நன்றி: ஈழமுரசு

111