அகதிகள் வருகையை கட்டுப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசு

ஞாயிறு அக்டோபர் 18, 2020

 கொரோனா பெருந்தொற்று சூழல் நிலவிவரும் தற்போதைய நிலையில், 2020- 21 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவுக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணிக்கையை ஆண்டுக்கு 18,750 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,750 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் இந்த கட்டுப்படுத்தல் நடவடிக்கையினால், 700 மில்லியன் ஆஸ். டாலர்கள் மிச்சமாகும் என அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது.  

1945 முதல் இதுவரை சுமார் 8 லட்சம் அகதிகளை ஆஸ்திரேலியா மீள்குடியமர்த்தியிருக்கிறது. இவ்வாறான சூழலில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய செயல்பாடு பெரும் அதிர்ச்சியை அகதிகளுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளதாக கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியாவின் இத்தகைய முடிவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறது ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில். 

“குறைந்த அளவிலான காலத்திற்கு கட்டுப்படுத்தும் நடவடிக்கை இருக்கக்கூடும் என நாங்கள் எதிர்ப்பார்த்தோம். ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அகதிகளை கட்டுப்படுத்துவதை அதுவும் நிதியை  நாங்கள் சேமிப்பதற்காக எனச் சொல்வதை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை,” எனக் கூறுகிறார் அந்த அமைப்பி தலைமை நிர்வாகி பால் பவர். 

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் அகதிகள், குடியேறிகள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் நாட்டுக்குள் நுழைய தடை விதித்தது ஆஸ்திரேலிய அரசு. அந்த வகையில் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை அடுத்த ஆண்டிலும் தொடரக்கூடும் எனக் கருதப்படுகின்றது. 

அதே சமயம், பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் 9 மில்லியன் டாலர்கள் அகதிகளுக்கு வேலைத் தேடவும் ஆஸ்திரேலியாவில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் செலவிடப்படும் எனக் கூறியுள்ளது ஆஸ்திரேலிய அரசு. 

அத்துடன், திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையையும் ஆஸ்திரேலிய அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. 1990க்கு பின்னர் முதல் பெரும் பொருளாதார மந்தநிலையை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறது. ஆதலால் பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக முதலீட்டாளர்கள், வேலை உருவாக்குபவர்கள் போன்ற வெளிநாட்டவர்களுக்கு நாட்டுக்குள் அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.