அகதிகளை சிறைவைக்கும் நவுருத்தீவு முகாம் தொடர்ந்து செயல்படும்: ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி !

செவ்வாய் ஜூன் 21, 2022

 ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை சிறைவைக்க உபயோகப்படுத்தப்பட்டு வரும் நவுருத்தீவின் பிராந்திய பரிசீலனை மையம் தொடர்ந்து செயல்படும் என ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இம்மையம் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த குடிவரவுத் தடுப்பு முகாம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. 

பசிபிக் தீவு நாடான நவுருத்தீவின் 2022-23 வரவுச் செலவு திட்டத்தின் படி, அந்த நாட்டின் வருவாயில் பாதிக்கும் மேலான தொகை இந்த மையத்தின் வருவாயிலிருந்தே கிடைக்கிறது. நவுருத்தீவின் வருவாய் மதிப்பீடு 250 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்து வரும் நிலையில், 135 மில்லியன் டாலர்கள் அதாவது சரி பாதிக்கும் மேலான வருவாய் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமை வைத்திருப்பதன் வழியாகவே நவுருவுக்கு கிடைக்கிறது. 

எல்லைகள் இறைமை நடவடிக்கையின் (Operation Sovereign Borders) கீழ் தஞ்சக்கோரிக்கையாளர்களை கடல்கடந்த முகாமில் வைத்து பரிசீலிப்பதில் தொழிற்கட்சி அரசாங்கம் உறுதியாக இருப்பதாக நியூசிலாந்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். 

கடந்த மே 31,2022 கணக்குப்படி, ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையின் கீழ் நவுருத்தீவில் 112 அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளானர். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற இவர்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக இத்தீவில் நிச்சயத்தன்மையற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

பசிபிக் தீவு நாடுகளில் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் பணியில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும்  இணைந்து செயலாற்ற வேண்டும் எனக் கூறியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர், அது சீனா போன்ற நாடுகளிடம் சிறிய நாடுகள் கடனாளியாக மாறுவதை தவிர்க்க உதவும் எனச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.