அகதிகளுக்கான மருத்துவ உதவிக்கு முட்டுக்கட்டை

சனி நவம்பர் 30, 2019

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில், அவர்களை ஆஸ்திரேலிய அழைத்துச் செல்ல அனுமதிக்கிறது மருத்துவ வெளியேற்றச் சட்டம். 

இவ்வாறான தடுப்பு முகாம்கள் நவுரு மற்றும் பப்பு நியூ கினியா ஆகிய தீவு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், இச்சட்டம் ஆளும் லிபரல் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முதல் இச்சட்டத்திற்கு கடுமையாக எதிர்த்து வருகிறது ஸ்காட் மாரிசன் தலைமையிலான அரசாங்கம்.

இந்த சூழலில், நவுருவில் உள்ள அகதிகள் நாட்டிற்கு வெளியே உள்ள மருத்துவர்களிடம் ஆலோசிக்க கட்டுப்பாடுகளை கொண்டு  வந்தது நவுரு அரசாங்கம். 

ஆனால், தனிப்பட்ட ரீதியாக ஒரு நோயாளிடம் ஆலோசிக்காமலேயே சம்பந்தப்பட்ட நோயாளி தொடர்பான மருத்துவ மதிப்பீட்டை மருத்துவர் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம், நவுரு கட்டுப்பாடுகளால் மருத்துவ ஆலோசனை மறுக்கப்படும் அகதிகளின் விண்ணப்பங்களையும் ஆஸ்திரேலிய உள்துறை பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையிலேயே மருத்துவ மதிப்பீடு தொடர்பான நீதிமன்றத்தின் முடிவிற்கு எதிராக மேல் முறையீடு செய்தது ஆஸ்திரேலிய அரசாங்கம். தற்போது, இந்த வழக்கினை ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.     

அகதிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அரசு குரூரத்துடன் நடந்து கொள்கிறது என்பதை இதை எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் மனித உரிமைகள் சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் டேவிட் புர்க். 

“ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் உள்ள அறுவைச்சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு நிபுணர்கள் மருத்துவ ஆவணங்கள் மற்றும் பரிசோதனைகளின் முடிவுகள் அடிப்படையில் நோயாளிக்கு சிகிச்சைக்கான அறிவுரையினை வழங்குகிறார்கள். அந்த வகையில் மருத்துவ சிகிச்சைக்கான அகதிகளின் விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவ தரநிலைகளுடன் பொருந்தியுள்ளது,” என்கிறார் புர்க். 

உடல்நலன் பாதிக்கப்பட்ட அகதிகளின் மருத்துவ விண்ணப்பங்களை தடுப்பதை நிறுத்திவிட்டு, இந்த நெருக்கடியான நிலைக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தீர்வுத்தேட வேண்டும் என்கிறார் டேவிட் புர்க்.

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்கள் ‘ஒரு போதும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ எனக் கூறி வரும் அந்நாட்டு அரசு, 2013 காலக்கட்டத்தில் அவ்வாறு வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை கடல் கடந்த் தடுப்பு முகாம்களில் இன்று வரை சிறைப்படுத்தியுள்ளது.