ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரையாம்!

புதன் பெப்ரவரி 26, 2020

வணக்கம் பிள்ளையள்.

எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே? ஆனால் இதே கேள்வியை மட்டும் என்னட்டைக் கேட்டுப் போடாதையுங்கோ. சும்மா முகத்துதிக்கு சுகமாக இருக்கிறேன் என்று சொல்கிற நிலைமையில் கூட நான் இல்லை.

பின்னை என்ன பிள்ளையள்?


கனடாவில் அடிக்கிற குளிரில் இருந்து தப்பியோடுவம் என்று பிரான்சுக்கு ஓடிப் போனால் இராசதந்திரப் போராட்டம் நடத்தித் தமிழீழம் காணப் போகுறோம் என்று என்னட்டைக் காசு பிடுங்கிறதில் ஒரு கும்பல் நிற்குது.

சரி, என்னத்துக்கு வீண் வேலை என்று பிரான்சை விட்டு லண்டனுக்கு ஓடினால் அங்கையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்கிற பெயரில் என்னட்டைக் காசு பறிக்கிறதுக்கு இன்னொரு கும்பல் கிளம்பிவருகுது.

கன நாளாக கனடாவில் பிலாவடிமூலைப் பக்கம் போகாததால் லண்டன் தமிழ்க் கடைகளில் கள் இருக்கும் என்ற நப்பாசையில் போன கிழமை தமிழ்க் கடை ஒன்றுக்கு போனேன். அங்கே போனால் கடை வாசலில் என்னை ஒருத்தர் மறிச்சிட்டார். நான் நினைக்கிறேன் என்ரை முகத்தில் ஏமாந்த சோணகிரி என்று எழுதியிருந்ததோ தெரியவில்லை.

அப்பிடித் தான் அவர் என்னோடை நடந்து கொண்ட விதம் இருந்தது பிள்ளையள்.

அவர் சொன்னார்: ‘ஐயா, நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இருக்கிற தடையை நீக்குறதுக்கு வழக்குப் போடப் போகுறோம். அதுக்கு நீங்கள் எங்களுக்கு இருநூறு பவுண்ஸ் பங்களிப்புச் செய்ய வேணும்.’

இதென்னடா வில்லங்கம் என்று போட்டு நான் அவரிட்டை உடனேயே கேட்டேன், ‘தம்பி நீங்கள் யார் என்றே எனக்குத் தெரியாது. என்னைக் கடை வாசலில் மறிச்சுக் காசு பறிக்கிறதில் குறியாக நிற்கிறியள்!’

அதுக்கு அவர் கிறங்காமல் சொன்னார்: ’நான் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை துணைப் பிரதமரின்ரை பிரதம செயலாளர். என்ரை மனுசி தான் துணைப் பிரதமர். நான் அவாவின்ரை பிரதம செயலாளர். இயக்கத்துக்கு மேலே இருக்கிற தடையை நீக்க வேணும் என்று என்ரை மனுசி துடியாய் துடிக்கிறாள். ஒரு பொம்பிளைக்கே இந்தளவு துடிப்பு இருக்கேக்குள்ளை நாங்கள் ஆம்பிளையள் சும்மா இருக்கலாமே? அது தான் அவா வழக்குப் போடுறதுக்கு காசு சேர்ப்பம் என்று வந்தனான்.’

உதைக் கேட்டதும் எனக்கு சுர் என்று கோபம் வந்திட்டுது. லண்டனில் இயக்கத்தை பிரிட்டிஸ் அரசாங்கம் தடை செய்து பத்தொன்பது வருசத்துக்கு மேலே ஆகுது.

தடைக்கு எதிராக இயக்கமே எந்த வழக்கும் போட இல்லை. அப்பிடி இருக்கேக்குள்ளை இவ்வளவு காலமும் சும்மா இருந்து போட்டு திடீரென்று பரிநிர்வாணமடைஞ்ச புத்த பெருமானின்ரை கணக்கில் உவையள் வழக்குப் போட்டு என்னத்தைக் கிழிக்கப் போகீனம்?

நானும் சும்மா தான் கேட்கிறேன் பிள்ளையள், இயக்கத்தின் மேல் பிரிட்டிஸ்காரர் தடை போட்ட உடனே அதை எதிர்த்து வழக்குப் போடத் தெரியாமலேயே இயக்கம் இருந்தது?

இந்தளவு பெரிய இயக்கத்தைக் கட்டி வளர்த்த தம்பி பிரபாகரனுக்கு என்ன செய்யிறது என்று தெரியாதே?

ஒன்று சொல்கிறேன் பிள்ளையள். நான் அறிஞ்ச வகையில் லண்டனில் இயக்கத்தின் மீது தடை போடுறதுக்கு முதல் அதைப் பற்றி தம்பி பாலசிங்கம் ஊடாக தலைவர் பிரபாகரனுக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் அறிவிச்சது. ‘நீங்கள் உடனடியாக ஆயுதப் போராட்டத்தை நிறுத்த வேணும். தமிழீழத்தைக் கைவிட வேணும். சந்திரிகா அம்மையாரோடு கதைச்சுக் கிடைக்கிற ஒரு அரசியல் தீர்வை ஏற்க வேணும். இல்லை என்றால் உங்களைத் தடை செய்யப் போறோம்’ என்று தம்பி பிரபாகரனை அந்த நேரத்தில் ரொனி பிளேயரின்ரை அமைச்சர்மார் மிரட்டினவையளாம்.

ஆனால் உதுக்கெல்லாம் தலைவர் மசியவில்லை. தம்பி பாலாவிட்டை அவர் உடனேயே சொல்லிப் போட்டார், ‘அண்ணை போராட்டம் நாட்டில் தான் நடக்குது. உங்கை தடை போடுகிறதால் இஞ்சை ஒன்று நடக்கப் போகிறதில்லை. இஞ்சை நாங்கள் ஓயாத அலைகளாக எங்கடை மண்ணை மீட்டுக் கொண்டிருக்கிறோம். பிரிட்டிஸ்காரன் போடப் போகிற தடைக்காக நாங்கள் எங்கடை மக்களின்ரை உரிமைகளை விலைபேச முடியாது.’

111

அதுக்குப் பிரிட்டிஸ்காரங்கள் சொன்னவங்களாம், ‘அப்பிடி என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் பிரிட்டனில் நீங்கள் அரசியல் செய்யிறது சாத்தியமில்லை. வேணும் என்றால் இயக்கத்தை இரண்டு பிரிவாகப் பிரியுங்கோ. ஒன்று அரசியல் பிரிவு. மற்றது இராணுவப் பிரிவு. இராணுவப் பிரிவை நாங்கள் தடை செய்வம். ஆனால் அரசியல் பிரிவைத் தடை செய்ய மாட்டோம்.’

வடஅயர்லாந்தில் ஆயுதப் போராட்டம் நடந்த பொழுது ஆயுதப் போராட்டத்தை நடத்தின ஐ.ஆர்.ஏ இயக்கத்தைத் தடை செய்து போட்டு, அதின்ரை அரசியல் பிரிவு மாதிரி இயங்கின சின்பெய்ன் கட்சியைத் தடை செய்யாமல் விட்ட மாதிரித் தான் அவை சொன்னவை.

ஆனால் உந்த சித்து விளையாட்டுக்கு இயக்கம் இணங்கவில்லை.

பின்னை என்ன? இயக்கத்தை இரண்டு பிரிவாக்கிப் போட்டு, ஒரு பிரிவைத் தடை செய்து பயங்கரவாதிகளாக்கி அதை ஓரங்கட்டி விட்டு, மற்றப் பிரிவைத் தூக்கிப் பிடிக்கிறது என்றால் போராட்டத்துக்கு என்னதான் அர்த்தம்? ஆயுதம் ஏந்திப் போராடுகிறவையள் எல்லாம் பயங்கரவாதிகள், அரசியல் கதைக்கிறவையள் எல்லாம் சுதந்திரப் போராளிகள் என்றால் உதை விட போராளிகளுக்கு ஒரு மோசமான அவமரியாதை தேவையே?

அது தான் இயக்கம் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனாலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் நோர்வேயும், பிரிட்டிஸ்காரரும் ஈடுபட்டிருந்த காலம் என்கிற படியால் உடனே தம்பி பாலசிங்கம் அதுக்குள்ளை ஒரு சுழியோட்டம் செய்தார்.

தடை வரப்போகுது என்று உறுதியானவுடன் பிரிட்டிஸ்காரருக்கும், நோர்வேக்காரருக்கும் சொன்னார், ‘நான் விடுதலைப் புலிகளின்ரை பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர். பிரபாகரனின்ரை அரசியல் ஆலோசகர். இயக்கத்தின்ரை தத்துவாசிரியர். இயக்கத்தை நீங்கள் தடை செய்தால் நான் இஞ்ச இருந்து கொண்டு எப்பிடி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் சமாதானம் கதைக்கிறது? என்னை எப்பிடிச் சந்தித்து அரசியல் தீர்வு பற்றி நீங்கள் எல்லோரும் பேசப் போகிறியள்?’ என்று ஆள் ஒரு போடு போட்டார்.

பிரிட்டிஸ்காரங்களும், நோர்வேக்காரங்களும் விறைச்சுப் போனாங்கள்.

அவங்களுக்கு விளங்கீட்டுது. தடையை சாக்காக வைச்சுக் கொண்டு சமாதான முயற்சிகளில் இருந்து பாலசிங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒதுங்கப் போகீனம் என்று. பிறகு ஒரே ஓயாத அலைகள் தான்.

கொஞ்ச நாள் தாங்களே தங்கடை தலையளைக் குடைஞ்சு பார்த்து யோசிச்சு விட்டுச் சொன்னாங்களாம்:

‘நாங்கள் தடை செய்த பிறகு விடுதலைப் புலிகளின்ரை கிளை பிரிட்டனில் இயங்க முடியாது. அப்பிடி வெளிப்படையாக இயங்க முயற்சித்தால் உடனே நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம். ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர், தத்துவாசிரியர், தலைமைப் பேச்சுவார்த்தையாளர் என்ற பெயரில் நீங்கள் சமாதானம் பேசுகிறதை நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். நீங்கள் யாரோடையும் தாராளமாக சமாதானம் பேசலாம்.’

ஆக மொத்தத்தில் ‘விடுதலைப் புலிகளின் பெயரில் காசு சேர்த்தால் மட்டும் உங்களைப் பிடிப்பம். சமாதானம் பேசினால் பிடிக்க மாட்டம்’ என்கிறது தான் அண்டைக்கு பிரிட்டிஸ்காரர் போட்ட தடையின் சூட்சுமம்.

இதிலை இருந்து என்ன விளங்குது பிள்ளையள்? உந்தத் தடை ஒரு அரசியல் முடிவு.

ஆயுதப் போராட்டத்தை நிறுத்திறதுக்கு கொண்டு வரப்பட்டது. இப்ப ஆயுதப் போராட்டம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதை யாரும் திரும்பவும் தொடங்கக் கூடாது என்கிறதுக்காகத் தான் தடையை பிரிட்டனும் ஏனைய நாடுகளும் போட்டு வைச்சிருக்குது.

கிட்டடியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குக்கு என்ன நடந்தது என்று நீங்கள் ஒருத்தரும் பார்க்க இல்லையே?

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்கிச்சுது: ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் உடனே புதிய விதிகளின் கீழ் இயக்கத்தை மீண்டும் தடை செய்திச்சுது.

இதுதான் பிரிட்டிஸ் தடை விசயத்திலும் நடக்கும். இருந்து பாருங்கோ.

சிறீலங்கா அரசாங்கத்தின் மீது இண்டைக்கு மேற்குலகிற்கு இருக்கிற ஒரேயொரு பிடி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை மட்டும் தான். ‘நாங்கள் தடையை நீக்கினால் இஞ்சை வெளிநாட்டில் காசு சேர்த்து மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தைப் புலம்பெயர் தமிழர்கள் இறக்குமதி செய்து போடுவீனம்' என்று பேய்க்காட்டித் தான் சிறீலங்கா அரசாங்கத்தை மேற்குலகம் தன்ரை பிடிக்குள் வைச்சிருக்க முயலுது.

எங்கடை தமிழர்களை ஜெனீவா மாயைக்குள் கடந்த பதினொரு வருசமாக வைச்சிருக்கிற மாதிரியான விளையாட்டுத் தான் உந்தத் தடை விசயம்.

அதனாலை வழக்குப் போட்டெல்லாம் எதுவுமே நடக்கப் போகிறதில்லை.

அதுக்காகத் தடையை எடுக்கிறதுக்கு ஒரு வழியும் இல்லை என்று மட்டும் நினைச்சுப் போடாதையுங்கோ. நான் முதல் சொன்ன மாதிரி தடை ஒரு அரசியல் முடிவு என்கிற படியால் அதை அரசியல் ரீதியாகத் தான் நாங்கள் அணுக வேணும் பிள்ளையள்.

பிரித்தானியாவில் இருக்கிற எம்.பிமாரை எங்கடை பக்கம் வளைச்சுப் போட்டுத் தடையை எடுக்கச் சொல்லி அவையளை எங்கடை ஆட்கள் வலியுறுத்தினால் தடை உடையும் பிள்ளையள்.

'உங்களுக்கு நாங்கள் வாக்குப் போடுகிறது என்றால் நீங்கள் முதலில் எங்களுக்காகப் போராடின மாவீரர்கள் மீது குத்தப்பட்டுள்ள பயங்கரவாத முத்திரையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தங்களிட்டை வாக்குக் கேட்டு வருகிற எம்.பிமாரிட்டை எங்கடை ஆட்கள் கேட்க வேணும் பிள்ளையள்.

அதை விட்டுப் போட்டு தைப்பொங்கல் நாளில் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நாலைஞ்சு எம்.பிமாருக்கு வேட்டியும், கோட்டும் போட்டு அழகு பார்த்து, அவையளுக்குப் புக்கை, வடை கொடுப்பதில் பயனில்லை பாருங்கோ.

திரும்பவும் சொல்கிறேன் பிள்ளையள். கனடாவில் 1996ஆம் ஆண்டு இயக்கத்தின்ரை முன்னாள் பொறுப்பாளர் மாணிக்கவாசம் சுரேஸ் கைது செய்யப்பட்ட போது அதுக்கு எதிராக வழக்குப் போடுகிறேன் என்று சொல்லி விசர் கூத்தடிச்சு சனத்தின்ரை காசை வீணடிச்சவர் தான் உந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்ரை கனவுலகப் பிரதமர் உருத்திரகுமாரன்.

அவர் வழக்குப் போட்டு 24 வருசம் ஆகுது. இப்பவும் எந்த நேரமும் நாடுகடத்தப்படுகின்ற நிலையில் தான் சுரேஸ் இருக்கிறார்.

பிறகு 1997ஆம் ஆண்டு இயக்கத்தை அமெரிக்கா தடை செய்த போதும் இப்படி ஒரு விசர்க்கூத்துத் தான் உருத்திரகுமாரன் அடிச்சவர். 2001ஆம் ஆண்டு இயக்கத்தை பிரிட்டிஸ்காரர் தடை செய்யேக்குள்ளையும் இப்படி ஒரு விசர் கூத்து அடிக்கிறதுக்குத் தான் உருத்திரகுமாரன் ஆயத்தம் செய்தவர்.

ஆனால் பிறகு இயக்கம் தலையிட்டு ஆளைப் பேசாமல் இருக்கச் சொன்னாப் பிறகு 19 வருசமாக அம்மான் அடக்கி வாசிச்சவர்.

இப்ப ஆலையில்லா ஊரில் இலுப்பம் பூ சர்க்கரை என்கிற கதையாக திரும்பவும் விசர்க் கூத்து அடிக்கிறதுக்கு ஆள் வெளிக்கிட்டு விட்டார்.

நான் திரும்பவும் சொல்கிறேன் பிள்ளையள். தடை உடைப்பு வழக்குகளுக்கு என்று சட்டத்தரணிகளுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கிற காசை ஒவ்வொரு நாடுகளிலும் அரசியல் வேலைகளை செய்வதற்கு செலவழித்தாலேயே தடை தானாக உடையும் பிள்ளையள்.

வேறை என்ன, வரட்டே..?

நன்றி: ஈழமுரசு