அழியும் நிலையில் 5 லட்சம் பூச்சி இனங்கள்!

புதன் பெப்ரவரி 12, 2020

மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் பூச்சி இனங்கள் குறித்து சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூச்சி இனங்கள் மட்டுமின்றி வண்டுகள், பறவை இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் வண்ணத்து பூச்சிகள், வண்டுகள், எறும்புகள், தேனீக்கள், ஈக்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடரால் டயனோசர் போன்ற அரிய உயிரினங்கள் அழிந்தன. அப்போது விண் பாறைகள் விழுந்து அவற்றை அழித்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தற்போது மனித இனத்தின் முறையற்ற நடவடிக்கையாலும், அதனால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்களாலும் அரிய வகை பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூச்சி இனங்கள் மனிதர்களின் உணவுக்காக கொன்று அழிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பருவ நிலை மாற்றங்களால் பெரும்பாலான பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன.

இதன் காரணமாக மகரந்த சேர்க்கை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தி குறைகின்றன.

பூச்சி இனங்கள் அழிவதன் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறாததால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 235 முதல் 577 பில்லியன் டாலர் அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படுவதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.