‘ஆழமாய் ஆராய்ந்தே இறுதி முடிவு எடுப்போம்’

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையும் அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் குறித்து, எமது சமூகத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் பரவியுள்ளன எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இது தொடர்பில் பேராயர் உள்ளிட்ட மதத்தலைவர்களுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் மேலும் பல தகவல்களை எதிர்பார்த்திருந்தோம். அதாவது, இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது, இதன் பின்னணியில் யார் இருந்தனர், யார் ஒருங்கமைத்தது, நேரடி மற்றும் மறைமுக உதவி செய்தது யார், இது போன்ற சகல விடயங்கள் தொடர்பிலும் முழுமையாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடனேயே ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

“இதன் உண்மையைக் கண்டறிவது மிகவும் அவசியமானது. இதற்குப் பொறுப்பானவரைச் சட்டத்தின் முன்னிறுத்துவதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கும், எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பதே, தற்போது முக்கியமான விடயமாகும்” என்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்பதால், மதத்தலைவர்களுடன் ஆழமான கலந்துரையாடலுக்குப் பின்னரே, எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்துக்கு வருவது சிறந்தது  என்பது, அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களைத் தடுத்தவர் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை என்பதை நினைவு கூருகின்றோம். அவர் மாத்திரம் தலையிடாமல் இருந்திருந்தால், நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும் என்றார்.