அமைதியின் பேரில் அழிக்கப்படும் இன்னொரு சுதந்திர தேசம்!

புதன் பெப்ரவரி 05, 2020

சுதந்திரவேட்கையில் தங்கள் தேசத்தின் விடியலிற்காகக் காத்திருக்கும் பலஸ்தீன மக்களின் கனவினை அழிப்பதற்கு வல்லரசுகள் முண்டியடிக்க ஆரம்பித்துள்ளன.

பலஸ்தீன மக்களின் நிலப்பரப்புகள் பறிக்கப்பட்டே, யூதர்களிற்கான தேசம் உருவாக்கப்பட்டது. பத்து முதல் 12 மில்லியன் பலஸ்தீன மக்கள் சொந்த நாட்டில் தேசமற்ற மக்களாகவும், புலம்பெயர் தேசங்களில், முக்கியமாக அயல் அரபு தேசங்களிலுமாகச் சிதறிக்கிடக்கின்றனர்.

மத்தியதரைக்கடலின் காசா பகுதிக்கும், ஜோர்தான் ஆற்றின் மேற்குக் கரைப் பகுதிக்கும் (வெஸ்ட்பாங்) இடையில், தங்களது சுதந்திர பலஸ்தீன தேசத்தை அமைக்க முயலும் பலஸ்தீன மக்களை, இஸ்ரேலும், சர்வதேச வல்லரசுகளும் தடுத்தே வருகின்றன. இது புலம்பெயர்ந்து வாழும் பலஸ்தீன மக்களின் நிலையைத் தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கியே வருகின்றது.

இதற்குள் மூக்கை நுழைக்கும் டொனால்ட் ட்ரம்ப் அரசு, இஸ்ரேலுடன் இணைந்து பலஸ்தீனத்தின் நிலப்பரப்பை மேலும் பறிக்கவே முயல்கின்றது. தனது முயற்சியே ‘இறுதிச் சந்தர்ப்பம்’ என்றும் இரு ‘இரு தரப்பிற்கும் இலாபமான சந்தர்ப்பம்’ என்றும் ‘இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஒப்பந்தம்’ என்றும் ட்ரம்ப் பீடிகை போட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தினை இரண்டு தரப்பையும் அழைத்த வெளியிடாமல், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடன் மட்டும் இணைந்து வெளியிட்டுள்ளமை, பலஸதீனத்தின் சுதந்திரக் கனவை அழிக்கும் முயற்சியின் ஆரம்பமாகவே அமைந்துள்ளது. இஸ்ரேலின் முகவர் போலவே டொனால்ட் ட்ரம்ப் செயற்பட ஆரம்பித்துள்ளார்.

இஸ்ரேல் - பலஸ்தீனியப் பிணக்கானது ஒரு நூற்றாண்டைக் கடந்துள்ளது. இந்த நிலப்பரப்பை ஆண்ட ஒட்டமான் பேரரசை முதலாம் உலகப்போரில் தோற்கடித்த பிரித்தானியா, பலஸ்தீனப் பகுதியை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. அந்தக் காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் மிகவும் சிறுபான்மையாக யூதர்களும், பெரும்பான்மையாக பலஸ்தீனர்களும் வாழ்ந்து வந்தனர்.

கிட்லர் யூதர்களைத் தேடித் தேடி வேட்டையாடத் தொடங்க, அதிலிருந்து தப்பித்த யூதர்கள், பெருந்தொçயாக 1920 இற்கும் 1940 இற்கும் இடையில் பலஸதீனத்திற்குள் நுழைந்து, பெரும் பகுதிகளில் தங்கள் குடியிருப்புக்களை அமைக்கத் தொடங்கினார்கள.

இதனால் சர்வதேச வலிமைகள், பலஸ்தீனர்களின் தேசத்தில், யூதர்களிற்கான தேசத்தினை நிறுவும் பொறுப்பைப் பிரித்தானியாவிடம் வழங்கியபோது, அங்கு பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. அந்த நிலத்திற்கான பூர்வீகப் பலஸ்தீனிய மக்களை விட, அந்த நிலம் யூதர்களின் மூதாதையரிற்குச் சொந்தம் என ஐ.நாவே அறிவிக்கும் நிலைக்குக் கீழிறங்கியது.

1947 இல் ஐ.நா, பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களிற்கான தேசமாகவும், அரபுகளின் தேசமாகவும் பிரிக்கும் ஆணையை வழங்கியது. ஜெருசலேம் நகரைச் சர்வதேச நகராக அறிவித்தது. ஆனால் இந்த ஆணையை அரபுப் பகுதி நிராகரித்ததால் இன்று வரை ஜெருசலேம் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகின்றது.

இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே, பிரித்தானியா யூதத் தலைவர்களை வைத்து, இஸ்ரேல் தேசத்தினைப் பிரகடனப்படுத்தியது.

பூர்வீக மக்களின் நிலங்களை அபகரித்து, அவர்களைச் சொந்த நிலத்தில் அகதிகளாக்கி, வந்தேறிகளிற்கு நாட்டை வழங்கும் செயலைப் பிரித்தானியா செய்து வந்துள்ளது. இதற்கு எங்களது தாய்நிலமும் பலியாகியது வரலாற்று உண்மை.

இஸ்ரேலைப் பிரகடனப்படுத்திப் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களை, பிரித்தானியா அவர்களின் நிலத்திலிருந்து பலவந்தமான வெளியேற்றியது. தங்களின் நிலம் பறிபோனதைப் பலஸ்தீன மக்கள் ‘அல்-நக்பா’ அதாவது ‘பேரழிவு’ என அழைக்கின்றனர்.

இந்த நேரத்தில் இழந்த நிலப்பரப்பை மீட்க அயல் நாடுகள் போரிலிறங்கியபோதும், வல்லரசுகளின் துணையுடன் போரை முடிவிற்குக் கொண்டு வந்த இஸ்ரேல், பஸ்தீனத்தீனத்தின் பெரும் பகுதியை கைப்பற்றி இஸ்ரேலுடன் இணைத்தது.

ஜோர்தான் விடுவித்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பலஸ்தீனத்தின் பகுதி வெஸ்ட்பாங்காகவும், எகிப்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தபகுதி காசாவாகவும் மாறியது. ஜெருசலோம் நகர் இரண்டாகத் துண்டாடப்பட்டு மேற்குப் பகுதியை இஸ்ரேலும், கிழக்குப் பகுதியை ஜோர்தானும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.

ஆனால் 1967 இல் நடந்த யுத்தத்தில், ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும், ஜோர்தான் வசமிருந்த வெஸ்ட்பாங்கையும், சிரியாவின் கோலன் உயர்பீடத்தையும், எகிப்திடமிருந்த காசாப் பகுதியும், அவர்களின் சினாய் குடாவையும் இஸ்ரேல் கைப்பற்றித் தனது நாட்டை பல மடங்கு பெரிதாக்கியது.

இந்தப் பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பலஸ்தீன மக்களை, இஸ்ரேல் உள்ளே நுழையவிட மறுத்ததோடு, இவர்கள் இஸ்ரேல் தேசத்திற்கு அச்சுறுத்தலானவ ர்கள் என்றும் அறிவித்தது. இன்று வரை எஞ்சிய பலஸ்தீன நிலப்பரப்புகளிற்கும் சட்டவிரோதக் குடியிருப்புகளை யூதர் கள் உருவாக்கி வருகின்றனர்.

தமிழர் பகுதிகளிற்குள், சிங்களவர்கள் பலவந்தக் குடியேற்றங்களை உருவாக்கி தமிழ் மக்களை விரட்டிய காலம் முதல், இன்று வரை தமிழர் நிலப்பரப்புக்கள் சிங்களக் குடியேற்றங்களால் சிதைக்கப்படும் செயலிற்கு ஒப்பாகவே, பலஸ்தீன மக்களும் யூதக் குடியேற்றங்களினால் விரட்டியடிக்கப்படுகின்றனர்.

இப்படிப் பல போர்களை முறியடித்த இஸரேலியப் படைகள் இன்று ஒரு யுத்தத்தைக் கூடச் சந்திக்கும் சக்தியற்றுப் பலவீனமாக உள்ளதாக, அவர்களின் அண்மையக் கணக்கெடுப்பை ஆதாரம் காட்டி, இஸ்ரேலின் இராணுவ ஆய்வுத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

111

ஈரானுடனோ, பெலனானின் ஹிஸ்புல்லாவுடனோ கூட உடனடியாக யுத்தத்தில் இறங்கும் நிலையில் இஸ்ரேலியப் படைகள் இல்லை என்பது தான் ஆச்சரியமான உண்மை.

இஸ்ரேலியப் படைகளின் முக்கிய பிரிவான 319வது படையணி இஸ்ரேலின் தெற்குப் பகுதியைக் காத்து வருகின்றது. இவர்களின் தாக்குதல் வளம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்கள் வசமுள்ள 52 சதவீதமான தாக்குதல் கவசவாகனங்கள், மற்றும் யுத்தத் தாங்கிகள், போரிற்குத் தகுதியற்ற நிலையிலேயே உள்ளதாகவும், 20 சதவீதமான ஆயுதப் பற்றாக்குறையில் இந்தப் படையணி உள்ளதாகவும் Ynet தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் படையணிக்கு யுத்த நேரத்தில் வழங்கள்களைச் செய்யவேண்டிய தெற்குக்கட்டளை மையம், தொலைத் தொடர்புகள், மற்றும் வாகனப் பற்றாக்குறையில் உள்ளதாகவும், யுத்தத்தின் போது காயப்பட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கான கருவிகளும் போதாமையாக உள்ளதாகவும், கணக்கெடுப்பை ஆதாரம் காட்டியுள்ளது இந்த இணையத்தளம்.

அத்துடன் இஸ்ரேலின் வான்பலமும் பலவீனமடைந்த நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சமயத்தில், இஸ்ரேல் தனது அனைத்துச் சட்டவிரோதக் குடியிருப்புக்களையும், அதிகாரபூர்வமாக்கி, பலஸ்தீனர்களிற்காக தேச உருவாக்கத்தைத் தடுப்பதற்காகவுமே, பெஞ்சமின் நெத்தன்யாஹூவும் டொனாலட் ட்ரம்பும் இணைந்து,  சமாதான நடவடிக்கை என்ற பெயரில் ஒப்ந்தத்தை உருவாக்கி உள்ளனர்.

தங்களது இராணுவப் பலவீனத்தைச் சரிசெய்ய இஸ்ரேல் அமெரிக்காவைக் களமிறக்கி உள்ளது.

அமெரிக்காவின நடவடிக்கையை ஜோர்தானும், எகிப்தும் வேறு பலநாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. பலஸ்தீன அரசின் உருவாக்கமே, தங்களின் ஜோர்தான் அரசின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் என ஜோர்தான் தெரிவித்துள்ளது.

ஆனாலும் ஐக்கிய அரபு அமீரகம் உட்படப் பல மத்தியகிழக்கு இஸ்லாமிய நாடுகள், ஈரானை ஒழிப்பதற்காக இஸ்ரேலுடனும், அமெரிக்காவுடனும் கைகோர்த்து நிற்கின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்று இஸ்ரேலுடன் கைகோர்த்திருக்கும் இந்த நாடுகள், பலஸ்தீனத்தைக் கைவிட்டுள்ளன.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை, இந்த நாடுகள் கேட்க மறுத்துள்ளன. இஸ்லாமிய நாடுகள் இப்படிப் பிரிந்து நிற்பதை அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகவும் சாமர்த்தியமாகப் பயன்படுத்துகின்றன.

டொனால்ட் டரம்பின் இந்த ‘அமைதி ஒப்பந்தம்’ இஸ்ரேலுடன் இணைந்து பல மாதங்களிற்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அதன் பின்னராகவே ஈரானுடனான ஒரு போரில் அமெரிக்கா களமிறங்கி ஈரானின் முப்படைத் தளபதியைப் படுகொலை செய்து, அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. ஈரானைப் பயங்கரவாத நாடாக உருவகப்படுத்தி, இஸ்லாமிய நாடுகளை இரண்டு துண்டாகப் பிரித்துப் பெரும் இராஜதந்திரத்தை நிறைவேற்றி உள்ளது.

இதன் பின்னர் இந்தவாரம், இஸ்ரேலும் அமெரிக்காவும் சேரந்து வெளியிட்ட இந்த ‘அமைதித்திட்டம்’ உடனடியாவே பாராளுமன்றத்தாலும் செனட் சபையாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெஸ்ட்பாங் பகுதிக்குள் அத்துமீறிக் குடியேறியிருக்கும் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களின் குடியிருப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதோடு, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்கவும் அறிவிக்கும் வரைபை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை பலஸ்தீனச் சுதந்திர தேசத்தின் உருவாக்கத்தை முற்றுமுழுதாக மறுதலிப்பதோடு, அதன் அழிவிற்கும் வழிகோலுவதாக மொகமத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இஸ்ரேல் - பலஸ்தீனப் பேச்சுவாரத்தைகளிற்கான கதவினை முற்றாக மூடுவதோடு, பலஸ்தீன மக்களை நிரந்தர அகதிகளாகவும் மாற்ற உள்ளதாகவும், பலஸ்தீன விடுதலை அமைப்பிற்கும், இஸ்ரேலிற்குமான தொர்பாடலை முற்றாக முறிப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தயாரித்துள்ள இந்த ஒப்பந்தம், ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலின் தங்கமயமான எதிர்காலத்தை உறுதி செய்து, சுதந்திர தேசத்திற்காகத் தங்களின் சொந்த மண்ணை யூத ஆக்கரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்காகப் போராடும் மக்களின் குரல்வளைகளை நசுக்க ஆரம்பித்துள்ளது.

வல்லரசுகளின் சொந்த இலாபங்களிற்குள் சுதந்திரதேசங்கள் அடிமைகளாக்கப்படுகின்றன.

-சோழகரிகாலன்-

நன்றி: ஈழமுரசு