அமேசான் காடுகளைப் பாதுகாக்க டைட்டானிக் படத்தின் கதாநயகன் 50 லட்சம் நன்கொடை!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019

பூமிக்கு தேவையான சுவாச காற்றில் 20 சதவீதத்தை உற்பத்தி செய்து தந்து வந்தது, பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகள்தான். எனவேதான் இந்த காடுகள், பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஏராளமான இடங்களில் தீப்பற்றி எரிகின்றன. இது ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மின்னல் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிவதாக சொல்லப்பட்டாலும், அங்கு வாழ்கிற மக்களின் கைவேலை இது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விவசாயம், சுரங்க பணிகளுக்கு தேவைப்படுகிற நிலத்தை குறி வைத்து காடுகள் தீயிட்டு அழிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே அமேசான் காடுகள் தீப்பற்றி எரியும் பிரச்சினையில் உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக கருத்து தெரிவித்தும், அழுத்தம் தந்தும் வருகின்றன. தீயை அணைப்பதற்கு போதுமான நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரேசிலின் பொருளாதாரத்தில் கை வைப்போம் என அந்த நாடுகள் மிரட்டல் விடுத்தன.

ஆனால் உலக நாடுகள் தலையிடக்கூடாது என்றார் அதிபர் ஜெயிர் போல்சொனரோ. இதனையடுத்து உலக அரங்கில் கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

இதனையடுத்து அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் பிரேசில் படைகள் இறங்கியது. பிற உலக நாடுகளும் பிரேசிலுக்கு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில் அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்க டைட்டானிக் படத்தின் ஹீரோவான ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் காணப்படும் பருவநிலை மாற்றங்களுக்கான தீர்வாக அமேசான் மழைக்காடுகள் உள்ளது.

அமேசான் இல்லாமல் நாம், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த முடியாது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து ‘எர்த் அலையன்ஸ்’ என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை கடந்த மாதம் தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பு அமேசானை பாதுகாக்கும் வகையில் உதவிகளை செய்ய அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி உதவி தொகை அமேசான்

காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல்கட்டமாக 5 மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்து நிதி திரட்டும் பணியை டிகாப்பிரியோ தொடங்கி வைத்துள்ளார்.