அமெரிக்க தொழிலாளர் நலத்துறை மந்திரி திடீர் பதவி விலகல்!

ஞாயிறு ஜூலை 14, 2019

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை மந்திரி அலெக்ஸ் அகோஸ்டா திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர், அலெக்ஸ் அகோஸ்டா (வயது 50). இவர் மத்திய அரசின் வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.இவர் திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கு ஜெப்ரி எப்ஸ்டீன் (66) என்ற பெரும் கோடீஸ்வர பைனான்சியர், சிறுமிகளை கடத்தி, உல்லாசம் அனுபவித்ததாக 2008-ம் ஆண்டு சிக்கினார்.

இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 45 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியது வரலாம்.ஆனால் அப்போது அரசு வக்கீலாக இருந்த அலெக்ஸ் அகோஸ்டா, ஜெப்ரியுடன் ரகசிய பேரம் நடத்தி தண்டனை குறைப்புக்கு வழி செய்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்ததை தொடர்ந்து அலெக்ஸ் அகோஸ்டா மந்திரி பதவியை விட்டு விலக வேண்டும் என்று நிர்ப்பந்தம் வந்தது.

இதைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி டிரம்பை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதம் அளித்தார். இருவரும் வாஷிங்டனில் கூட்டாக நிருபர்கள் மத்தியில் தோன்றினர்.

அப்போது அலெக்ஸ் அகோஸ்டா கூறும்போது, “ ஜெப்ரி விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்தேன். பதவி விலகுவதுதான் சரியானது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.