அமெரிக்காவில் எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்!

திங்கள் சனவரி 27, 2020

அமெரிக்காவில் முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எலும்புக்கூடுக்கு தொப்பி அணிவித்து காரின் முன்இருக்கையில் அமர வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் உள்ளது. இதில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து நெரிசல் இருக்காது.

சில கார் சாரதிகள்  காரில் தங்களுடன் ஆட்கள் இருப்பதுபோல் காட்டி விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணிப்பதும், அவர்களை போக்குவரத்து காவல் துறை  பிடித்து அபராதம் விதிப்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எலும்புக்கூடுக்கு தொப்பி அணிவித்து காரின் முன்இருக்கையில் அமர வைத்து, காரை ஓட்டி சென்றார்.

அவர் நினைத்தபடியே அவரது கார் தனி வழித்தடத்தில் சென்றது. ஆனால் காருக்குள் இருப்பது எலும்புக்கூடு என்பதை போக்குவரத்து காவல் துறையினர்  கண்டுபிடித்துவிட்டனர். உடனடியாக அந்த காரை தடுத்து நிறுத்தி முதியவரை பிடித்தனர்.

பின்னர் அவருக்கு அபராதம் விதித்த காவல் துறை மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.