அம்மானின் கடிதங்கள்

வெள்ளி மார்ச் 19, 2021

பிரித்தானியாவில் இராஜதந்திரக் களமாடும் பெருந்தகைகளுக்கு,

 

நான் இங்கு நலம். உங்கள் நலமறிய ஆவல்.

 

நிற்க, கடந்த சில வாரங்களாக பிரித்தானியாவில் நீங்கள் தொடுத்திருக்கும் இராஜதந்திரப் போர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த பரிமாணத்திற்கு நகர்த்திச் செல்வதை அறிந்து பெருமையும், பெருமிதமும் கொண்டேன்.

 

குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டுவதும், பட்டினி கிடப்பதும் வழமை தான். ஆனாலும் அப்படிப்பட்ட ஒரு குடும்பப் பிரச்சினையை மிகப் பெரும் இராஜதந்திரப் போராட்டமாக்கி, சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய சாம்ராச்சியத்தையே மண்டியிட வைத்த உங்களின் மதிநுட்பமே தனி தான்.

 

அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து விட்டு, வீட்டிற்குள் இருந்து பட்டினிப் போர் புரிந்த உங்களின் படை மாட்சியே தனி தான். பொது இடம் ஒன்றில் உண்ணாவிரதம் இருந்தால் எல்லோரும் உங்களைக் கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் இருந்தால் அந்தப் பிரச்சினை இல்லையே! தண்ணீர் மட்டும் குடித்துப் போராடுவதாகக் கூறிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் ஏதாவது சத்துணவை அல்லது குளிகைகளையும் தண்ணீரோடு விழுங்கலாம். ஏன், யாருக்கும் தெரியாமல் நீங்கள் சாப்பிட்டாலும் அது வெளியில் தெரிய வரவா போகின்றது?

 

Pongal

 

வன்னியில் மக்கள் பலிகொள்ளப்பட்ட பொழுது அங்கு மக்களோடு மக்களாக நிற்காமல் இலண்டனுக்கு ஓடி வந்த ரிம் மார்ட்டின், 2009 மே மாதம் வன்னி மக்களுக்காக வெஸ்ட்மினிஸ்டரில் சுழற்சி முறையில் தண்ணீர் குடித்துப் பட்டினிப் போர் புரிந்து விட்டமின் குளிகைகளை விழுங்கியதும், அதைப் பார்த்து நீங்கள் எல்லாம் மலைத்துப் போனதும் பழைய கதை.

 

அதன் பின் தண்ணீரில் சேலைன் கலந்து குடித்து எப்படி பட்டினி கிடப்பது என்று உங்களுக்கு ஜெயானந்தமூர்த்தியும், அவருக்குக் கேக் தீத்திய சிசியப் பிள்ளையும் புதிய வித்தையைக் காட்டித் தந்த பின்னர், பட்டினிப் போருக்குப் புதுவடிவம் கொடுப்பது உங்களுக்குக் கடினமானதா என்ன?

 

ஆனாலும் உங்கள் வீரத்தை மெச்சியே ஆக வேண்டும். சிங்களப் படைகளோடு களமாடும் திராணியற்ற நீங்கள், இலண்டனில் வெறும் தடிகளோடும், ரேசரோடும் திரியும் பிரிட்டிஸ் காவல்துறையினரை கையில் இருந்த கொட்டன்களால் அடித்தது உங்களின் வீரத்திற்கு மட்டுமன்றி உங்கள் போர் யுக்திகளின் புதிய பரிமாணங்களுக்கும் சான்று பகரும் ஒன்று.

 

Photo

 

சிங்கள இராணுவத்தின் மீதோ அல்லது காவல்துறை மீதோ நீங்கள் கை வைத்தால் உங்கள் கதை அவ்வளவு தான். ஆனால் பிரட்டிஸ் காவல்துறை மீது கை வைத்தால் அப்படி அல்ல. குறைந்த பட்சம் உங்களைக் கைது செய்து சில மணி நேரம் தடுத்து வைத்து விட்டு நீதிமன்றில் முன்னிறுத்தி விடுதலை செய்து விடுவார்கள்.

 

சிங்கள இராணுவம் மீதோ அல்லது காவல்துறை மீதோ நீங்கள் கை வைத்தால், அதன் பின் அவர்களின் துப்பாக்கி உங்களைப் பதம் பார்க்கத் தவறினால், சிறையில் வைத்து உங்களை தோலை அல்லவா உரித்து விடுவார்கள்! பிரிட்டிஸ் காவல்துறை அப்படிச் செய்யப் போவதில்லை தானே?

 

இங்கு தான் உங்களின் இராஜதந்திரமும், போரியல் மதிநுட்பமும் வெள்ளிடை மலையாகின்றன. அப்பப்பா! நினைக்கும் பொழுதே மலைப்பாக இருக்கின்றது.

 

நிற்க, நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எங்களின் பிரச்சினை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாமே? ஆயினும் விவாதத்தின் முடிவில் எங்களுக்குச் சார்பாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லையாமே?

 

ஆனாலும், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எங்களின் பிரச்சினை பற்றி விவாதம் நடந்ததே பெரிய சாதனை தானே! தமிழ் மக்கள் செறிந்து வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் இவ் விவாதத்தில் கலந்து கொள்ள வைத்தது அதிலும் மிகப் பெரும் சாதனை. அதிலும் பெரிய சாதனை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் என்ற அமைப்பும், பிரிட்டிஸ் தமிழ் கொன்சேவற்றிவ்ஸ் என்ற அமைப்பும் தங்களுக்கு இருந்த தொடர்பை வைத்து ஏற்பாடு செய்த விவாதத்தை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் மகத்தான சாதனையாக உரிமை கோரியது தான்.

 

எது எப்படியோ, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரும் விடயத்தில் வினைத்திறனின்றி இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு உயிர் கொடுத்து வைத்திருப்பதே நீங்கள் செய்த இன்னுமொரு சாதனை என்று தான் கூற வேண்டும்.

 

எப்படியோ, நீங்கள் எல்லோரும் வசதியாக, எந்தக் கவலையும் இல்லாமல் இலண்டனில் வாழ்பவர்கள். இங்குள்ள மக்களுக்கு நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காமல் போனால் என்ன? எதற்காகச் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும்? நீங்கள் போராடிக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு ஆண்டும் பிம்பத்தை ஏற்படுத்தினால் போதும் தானே!

 

எப்படியோ, காலையில் எழுந்து சூமில் வேலை செய்து விட்டு, மாலையில் சூமில் இராஜதந்திர வியூகங்களை வகுத்து, சனி, ஞாயிறு தினங்களில் பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க அரசியல்வாதிகளுடன் விஸ்கியும், வைனும் குடித்து இராஜதந்திரப் போர் புரியும் நீங்கள் எதற்காகக் காணாமல் போகச் செய்யப்பட்ட எமது உறவுகளுக்கும், இனப்படுகொலைக்கு ஆளாகிய எமது மக்களுக்கும் நீதியைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்? ஏதோ முயற்சி செய்வது போல் காட்டிக் கொண்டு உங்களை நீங்கள் எல்லோரும் பிரபல்யப்படுத்தினாலே போதும் தானே!

 

சரி, இராஜதந்திரப் போர் புரிந்து நீங்கள் எல்லோரும் களைத்திருப்பீர்கள். இனி இரண்டு ஆண்டுகளுக்கு எமது பிரச்சினை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலட்டிக் கொள்ளப் போவதில்லை.

 

ஆனாலும் அங்கு ஏதோ நடப்பது போல் காண்பிப்பதற்கு ஆண்டுக்கு இரண்டு தடவைகள் ஜெனீவாவிற்கு நீங்கள் காவடி எடுக்காமலா இருக்க முடியும்?

 

வேறு என்ன? இனிச் சித்திரைப் புத்தாண்டு வரப் போகின்றது. பிரிட்டிஸ் பிரதமரிடம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வரப் போகின்றது. அவரும் தமிழர்கள் தயாரிக்கும் புக்கை, வடை வாயூறும் வகையில் இருந்ததாக அரைத்த மாவைத் திரும்பவும் அரைத்து அறிக்கை விடுவார்.

 

Boris

 

இரத்த வாடையையும், நிண நெடிலையும் முகர்ந்து அழிவின் விளிம்பில் நிற்கும் நாங்களும் ஏமாந்த சோணகிரிகள் போல் ஆகா, ஓகோ என்று அவரைப் பாராட்டுவோம்.

 

போராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் போராடாமல் இருப்பதற்கான உங்கள் இலட்சியம் மட்டும் ஒரு போதும் மாறப் போவதில்லை.

 

அன்புடன்,
உங்கள் அம்மான்.