அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

அம்பாந்தோட்டை துறைமுகம் கடல்சார் வர்த்தக போக்குவரத்து மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தாய்லாந்தின் ரனொங் துறைமுகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. 

இருநாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவினால் இலங்கை – தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பொதுவாக விளங்கும் வங்காள விரிகுடாவில் இந்த வர்த்தக போக்குவரத்து ஒத்துழைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படவுள்ளது. 

தாய்லாந்தின் ரனொங் துறைமுகம் அண்மையில் இந்தியாவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா செயற்திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் தாய்லாந்தின் கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். 'இந்த முயற்சியின் ஓரங்கமாக நாங்களும் இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். இதன்மூலம் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா செயற்திட்டத்தில் உள்ளடங்கும் அனைத்து நாடுகளும் அனுகூலமடைய முடியும்' என்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரே ரென் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக ஏற்கனவே இந்திய உற்பத்தி கார்கள் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அண்மையில் கைத்தொழில் வலயமொன்றும் காணப்படும் நிலையில், இத்துறைமுகம் இலங்கையின் தென்பிராந்தியத்துக்கான நுழைவாயிலாகத் திகழும் என்றும் ரே ரென் குறிப்பிட்டிருக்கிறார்.