அம்பாறையில் திடீர் சோதனை!

சனி பெப்ரவரி 22, 2020

அம்பாறை விசேட போக்குவரத்து காவல் துறை , இளைஞர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை காரணமாக வீதி ஒழுங்கு முறைகளை மீறிய சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மற்றும் இன்று, கல்முனை பிராந்தியத்தில் காலை முதல் மாலை வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சாய்ந்தமருது புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி பாண்டிருப்பு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த  திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்காவல் துறையால் வழங்கப்பட்டன.

குறித்த சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட காவல் துறை  அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன்போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல் துறையுடன்  இணைந்து கல்முனை சவளைக்கடை காவல் துறை  நிலைய போக்குவரத்து காவல் துறையும்  இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்

மேலும் இத்திடீர் சோதனை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சிறிலங்கா  இராணுவம் மற்றும் கடற்படையினர் தற்காலிக தடைகளை ஏற்படுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.