ஆணைக்குழு தலைவர் ஒருவரை நியமிக்கக்கோரி வலியுறுத்தல்!

வியாழன் அக்டோபர் 10, 2019

தற்போதைய சட்டத்துக்கு அமைய பதில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கீழ் சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது. ஆகவே நிரந்தரமாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஒருவரை நியமிக்கக்கோரி அரசியல் அமைப்பு சபை தேர்தல்கள் ஆணையகத்திற்கு வலியுறுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இன்று அரசியல் அமைப்பு பேரவை கூடியது. சுயாதீன தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதமர் அணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். 

விசேட அழைப்பின் பெயரில் தேர்தல்கள் ஆணைக்குழு பதில் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 

எனினும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹிந்த சமரசிங்க எம்.பி ஆகியோர் கலந்துகொள்ள வில்லை. 

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற நிலையில் பதில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஒருவரின் கீழ் சுயாதீனமாக ஜனாதிபதி தேர்தலை நடத்த எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை. ஆகவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என சட்டமா அதிபர் தப்புலடி லிவேரா அரசியல் அமைப்பு சபையில் தெரிவித்தார். 

அதற்கமைய நிரந்தர ஆணைக்குழு தலைவர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சபை தேர்தல்கள் ஆணையகத்திற்கு வலியுறுத்தியுள்ளது.