ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 172 தமிழர்கள் பிணையில் விடுதலை: தமிழக அரசு

செவ்வாய் நவம்பர் 03, 2015

செம்மரங்கள் வெட்டியதாக ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இப்படி அண்மையில் 20 பேர் ஒட்டுமொத்தமாக சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, அதே வேளையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இந்த புகாரில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து, ஆந்திர சிறைகளில் இருந்து 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 344 பேரை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று(நவம்பர் 3) தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,'ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரி மெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 07.04.2015 அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஒரு விரைவான மற்றும் நம்பகமான விசாரணைக்கு ஆணையிடுமாறும், மனித உரிமை மீறல் குற்றம் நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தா.

முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர் ஒவ்வொருவருடைய குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகளாக இருப்பதாலும், அவர்களது ஏழ்மை மற்றும் துயர நிலையைக் கருத்தில் கொண்டும், அந்தக் கோரிக்கையினை பரிவுடனும், கருணையுடனும் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, மனுதாரர்களின் தகுதிக்கேற்ப 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சமையல் உதவியாளர் பணியும், 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு

சத்துணவு ஒருங்கிணைப்பாளர் பணியும் மற்றும் ஒருவரது வாரிசுதாரருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணியும் வழங்கிட உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மேற்கண்ட 20 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை 06.08.2015 அன்று முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பல தமிழர்கள் ஆந்திர சிறைகளில் உள்ளதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா, அவ்வாறு ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் விவரங்களை ஆந்திர காவல்துறையினரிடமிருந்து பெறுமாறு காவல் துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறைகளில் உள்ள 516 தமிழர்களின் விவரங்கள் காவல் துறை தலைமை இயக்குனரால் பெறப்பட்டது.

அதன் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் வாடும் 516 தமிழர்களை பிணையில் உடனடியாக விடுவிக்கவும், அவர்களது வறிய நிலையை கருத்திற்கொண்டு அவர்களது வழக்கினை நடத்த போதிய இலவச

சட்ட உதவிகளை வழங்குமாறும் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 15.10.2015 அன்று முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் காரணமாக ஆந்திர சிறைகளிலுள்ள 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 344 தமிழர்கள் இன்னமும் ஆந்திர சிறைகளில் உள்ளனர்.

ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட 312 கோரிக்கை மனுக்கள் தலைமைச் செயலரால் 29.10.2015 அன்று தமிழ்நாடு மாநில சட்ட உதவி ஆணையம் மூலம் ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, ஆந்திர சிறைகளில் உள்ளவர்களை பிணையில் வெளிக்கொணர இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்று ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கறிஞர் குழு ஆந்திர மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களில் பிணை மனுக்களை தாக்கல் செய்து அவர்களை பிணையில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். இதற்கான செலவின முன்பணமாக 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது'.