அந்தக்கடல் அழுகிறது…

புதன் மே 13, 2020

 பகல்முழுவதும் எவருமற்று
தனித்திருக்கும் கடல்
இரவுகளில் இரைந்து
அழத் தொடங்கிவிடுகிறது….

ஆண்டுகள் ஆக ஆக
நினைவுகள் பெருகி
மூப்படைந்து போனாலும்
அந்தக்கடல் அழுகிறது….

துயரங்களைத்
தேக்கிவைத்திருக்கும்
என்னையும் அது
தூங்க விடுவதில்லை……

ஓடிஓடி கரைவந்து
ஏமாற்றத்தோடு அது
திரும்பும் போது என்
கண்களும் கடலாகின்றன….

என்புகள் துருத்த
பழைய நினைவுகளோடு வாழும்
ஒரு முதியவரைப்போல
நடுங்குகிறது அக்கடல்……

உருகிவழியும் நிலவையும்
கருமை போர்த்த வனத்தையும்
பார்த்துப் பாரத்துப் பொங்கி
அழுதுகிடக்கிறது கடல்……

மணல்வெளியில்
இன்னமும் அழியாதிருக்கும்
காலடித் தடங்கள் பார்த்து
கதறி அழுகிறது கடல்………

உன்னி எழுந்து
ஓடுகின்ற வானம்நோக்கி
சபதம் செய்தபடி
உரத்து அழுகிறது கடல்……

மலைகளுக்கு அப்பால்
வீசாது விறைத்துநிற்கும்
மரங்களுக்கு அப்பால்
விரிந்து கிடக்கும்
வெளிகளுக்கும் அப்பால்….

ஊசலாடிக் கொண்டிருக்கும்
என் தேசத்திலிருந்து
உறவுகளைத் தேடி
அழுதுகொண்டிருக்கிறது கடல்.

– ஆதிலட்சுமி சிவகுமார்