அந்தப் பொற்காலம்மீண்டும் வராதோ..?ஏங்கும் தமிழினம்

புதன் மார்ச் 20, 2019

தமிழர்களுக்கு தனித் தமிழீழமே தீர்வு என்ற விட்டுக்கொடுப்பற்ற கோரிக்கையுடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட போராட்டம் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்பட்ட பின்னர் சொந்த நாட்டிலேயே தமிழர்கள் ஏதிலிகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்ச் சந்ததி விடிவின்றி, விடுதலை இன்றி, எதிர்கால இலட்சியம் இன்றி சூனியமான அரசியல் இருளுக்குள் இன்று  இருக்கும் நிலை தோன்றியுள்ளது. தாயகத்தில் மட்டுமன்றி அனைத்துலக ரீதியாக உள்ள தமிழர்களிடம், யார் தமக்குத் தீர்வைப் பெற்றுத் தருவார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கின்றது. இதற்கு விடை காணாமலேயே ஒவ்வொரு தமிழர்களும் மடிந்துகொண்டிருக்கின்றனர்.

தமிழர் தாயகத்தில் சிங்களத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரல் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. தமிழர்களை முற்றுமுழுதாக அடக்கி ஒடுக்கவேண்டும் என்ற சிங்களத்தின் தீராத ஆசை எங்கே நிறைவேற்றப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமிழ்த் தேசியவாதிகளிடம் ஏற்பட்டிருக்கின்றது.

எனினும் எப்படியாவது எமது இலக்குகளை அடைந்துவிடவேண்டும் என்ற பேரவாவுடன் அவர்கள் பயணிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் தேசத்திலும் இதே நிலைப்பாடுதான்.

ஏன் நாம் இப்படி ஆக்கப்பட்டோம்? யார் செய்த பாவம் எம்மைச் சூழ்ந்திருக்கின்றது? யார் எமது இனத்தைச் சபித்தது?

இலட்சியங்களை எம்மால் அடைய முடியுமா? இப்படியான கேள்விகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் இருக்கின்றது. சிலர் வெளிப்படையாகக் கதைத்தாலும் பலர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர் தாயகம் சீரழிக்கப்படுவதை தேசியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமக்குள் வெதும்பிக்கொண்டிருக்கின்றனர். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் மனம் உடைந்தவர்களாக இருக்கின்றனர்.காரணம், கிராமங்களில் அன்றாடம் நடைபெறும் சமூகச் சீர்கேடுகள்.

இளம் பெண்கள் வீதியால் செல்ல முடியவில்லை. கல்வி கற்க முடியவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் சர்வதேசரீதியான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

அது முற்றுமுழுதான பொய். தமிழ் மக்கள் இன்று கண்ணீரும் கம்பலையுமாகவே இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதரீதியான அடக்குமுறையை மாத்திரமே சிங்களத் தரப்பு நிறுத்திக்கொண்டிருக்கின்றது. மற்றைய அனைத்து அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இளைஞர்களை இலக்குவைத்து போதைப்பொருள் வியாபாரம்  கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

சிறீலங்கா படையினரின் உதவியுடன் கஞ்சா, அபின், யஹரோயின், மாவா போன்ற பல போதைப்பொருட்கள் இளைஞர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. மாணவர்களும் விதிவிலக்கு அல்ல. பாடசாலைகளுக்கு முன்னாலேயே இரகசிய வியாபாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழர் சமூகம் எதிர்காலத்தில் கல்வி, அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துத் துறைகளிலுமே பலவீனமாகதாக மாறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சிங்கள தேசம் இந்த திட்டமிட்ட செயற்பாட்டை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது.

கிராமங்களில் பொருளாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் கட்டுக்கோப்பாக இருந்த குடும்பங்களின் வாழ்வியல் நிலை இன்று கேள்விக்குறியாகி இருக்கின்றது.

போதைக்கு அடிமையான குடும்பங்களில் தினமும் சண்டைகள். நிம்மதி அற்ற வாழ்க்கை. நிலை தடுமாற்றம்.
உழைத்து குடும்ப வருமானத்தை உயர்த்தவேண்டிய இளைஞர்கள் குடித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உழைக்கின்ற பணம் போதைப்பொருள் கொள்வனவிற்கு செலவிடப்படுகின்றது. குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பணம் இல்லை. இதனால் நிம்மதியற்ற வாழ்வு இதில் கவலைக்கிடமான விடயம் என்னவெனில், முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் கூட இவ்வாறான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமைதான். அவர்களின் குடும்பங்களைக்கூட வறுமை சூழ்ந்திருக்கின்றது.

பாடசாலைப் படிப்பை இடைநிறுத்திய இளைஞர்களின் வாழ்வு இலட்சியமற்றதாக மாறிக்கொண்டிருக்கின்றது. கட்டவிழ்த்து விடப்பட்ட கால்நடைகளைப் போல அவர்களின் வாழ்வு திசைமாறிச் சென்றுகொண்டிருக்கின்றது. வழிப்படுத்த எவருமில்லை. தவறு செய்யும்போது தண்டிக்க எவரும் இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டியது காவல்துறையினரின் கடமை. ஆனால், தமிழர் தாயகத்தில் தவறுகளும் குற்றங்களும் அதிகரிப்பதற்கு சிறீலங்காக் காவல்துறையினரே காரணமாக இருக்கின்றனர்.

தடியோடு சண்டைக்குச் செல்பவனுக்கு வாள் கொடுத்து அனுப்பும் பணியில் சிறீலங்காக் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கம்மாலை (இரும்பு வேலை செய்யும் இடம்) ஒன்றிற்கு சிவில் உடையில் சென்ற சிறீலங்காக் காவல்துறையினர் வாள்களைச் செய்து சென்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இளைஞர்களின் கைகளில் இருக்கவேண்டிய வாள்களைப் பறித்து நீதிமன்றில் பாரப்படுத்தவேண்டிய சிறீலங்காக் காவல்துறையினர், தாங்களே வாள்களைச் செய்துகொண்டு செல்கின்றனர் என்றால் தமிழ் இளைஞர்களை அவர்கள் எப்படிச் சீரழிக்கின்றனர் என்பதை சிந்திக்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற ரவுடிக் கும்பல்களுக்கு சிறீலங்காக் காவல்துறையினரும் படையினருமே பாதுகாப்பு வழங்குகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிக் கும்பல்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்டவை. சிறீலங்கா படைப் புலனாய்வுத்துறை ஊடாக அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. தற்போதும் இந்தக் குழுக்களுக்கு அரச நிதி கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது.

தமிழ்ச் சமூகத்தை சீரழிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு, மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்பேரில் இன்று அது அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சொந்தமாக ஒரு மதுபான நிலையத்தை நடத்திவருகின்றார். இதேபோன்று, வவுனியாவிலும் நடத்தப்படுகின்றது. அண்மையில், வடமராட்சியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை சிறீலங்காக் காவல்துறை கைது செய்தபோது நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அது தமது ஆட்கள் எனக் கூறி அவர்களை விடுவித்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டு, தமிழ் மக்களின் மீட்பர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் இவர்களே இவ்வாறு செயற்படுகின்றபோது தமிழர்கள் எப்படித் தழைத்தோங்க முடியும்? தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மோசடிகளுக்கும் கொடுமைகளுக்கும் சித்திரவதை, வன்புணர்வுகளுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காரணமானவர்களாக இருக்கின்றனர்.

அண்ணை இல்லாத திண்ணையில் எவரெவரோ எல்லாம் வந்து இருக்கின்றனர். இதனால்தான் இன்று எமக்கு இந்த இழி நிலை என ஒட்மொத்த தமிழ் இனமும் கலங்கிக்கொண்டிருக்கின்றது. ‘அவங்கள் இருந்தால் இப்படியயல்லாம் நடக்குமோ?’ என்ற வார்த்தைகள் வயதானவர்களின் வாயில் இருந்து அடிக்கடி வருகின்றன.

தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் வரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அப்பளுக்கற்ற இன விடுதலைக்காகப் போராடிய அவர்களின் காலம் தமிழீழத்தின் பொற்காலம். அந்தக் காலத்தையே இன்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழீழத்தில் மட்டுமன்றி, புலம்பெயர் தேசத்திலும் தமிழர்கள் தறிகெட்டுப் போவதற்கு உயிரினும் மேலான அந்தத் தலைவனும் தளபதிகளும் போராளிகளும் களத்தில் இல்லாததே காரணம். இந்த உண்மை அனைவராலும் உணரப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழீழத்தில் வசந்த காலம் மலராதோ என ஏங்கும் மக்களுக்கு விரைவில் நல்லதொரு செய்தி பிறக்கும்.பட்ட மரத்தில் மீண்டும் இலைகள் துளிர்க்கும். சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் மேலெழும். காடுகளும் மரங்களும் மீண்டும் தேசக் கீதம் இசைக்கும். வலி தந்தோருக்கு கிலியைக் கொடுக்க மீண்டும் புலி பிறப்பெடுக்கும். என்ற நம்பிக்கையுடனேயே நாட்கள் நகர்கின்றன.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு