அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் முறிவு!

வெள்ளி ஓகஸ்ட் 09, 2019

அமெரிக்கா-ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் ஆயுத போட்டி அபாயம் ஏற்படும் என அச்சம்

அமெரிக்க-சோவியத் ஒன்றிய பனிப் போர் காலத்தில் நடுத்தர தொலைவு ஏவுகணைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவும், ரஷ்யாவும் 32 ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த இரு நாடுகளும் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன.

111

அதையடுத்து, வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொங்கில் நடைபெறும் ஆசியான் மாநாட்டின் இடையே, நிகழ்ச்சியயான்றில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ, ரஷ்யாவுடனான அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அந்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கு ரஷ்யாதான் முழுக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம்,

அமெரிக்கா மேற்கொண்ட முன்முயற்சிகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் சோவியத் ஒன்றியம் நிறுத்தியது.

அதனை எதிர்கொள்வதற்காக, நேட்டோ படையும் அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்தது.

இதனால் இரு தரப்பிலும் அணு ஆயுதப் போர் அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்
கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே 1981ம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

சுமார் 6 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நடுத்தர தொலைவு ஏவுகணைகளைக் கைவிட இரு நாடுகளுக்கும் இடையே 1987ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது, 500 கிலோ மீற்றர் முதல் 5,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

நடுத்தர தொலைவு அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (யூழிஐஆe ஹிற்உயிeழிr ய்லிrஉeவி (ணூஹிய்)) எனப் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் ஒன்றியத்தின் அதிபராக இருந்த மிகைல் கோபர்சேவும் கையயழுத்திட்டனர்.

அந்த ஒப்பந்தத்தின்படி, தங்களிடம் ஏற்கனவே இருந்த நடுத்தர தொலைவு ஏவுகணைகள், அவற்றை ஏவும் சாதனங்கள், எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை அழிக்கவும் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஒப்புக் கொண்டன.

இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது. கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இது கட்டுப்படுத்தாது.

அதோடு இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க இந்த ஒப்பந்தம் பரஸ்பரம் அனுமதி வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இருநாடுகளில் இருந்த சுமார் 2,700 ஏவுகணைகள் 1991ம் ஆண்டு அழிக்கப்பட்டன.

இந்த சூழலில் 2002ம் ஆண்டு கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. இது ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐ.என்.எப். ஒப்பந்தம் ரஷ்யாவின் நலன்களை பாதுகாக்கவில்லை என ரஷ்ய அதிபர் புட்டின் 2007ம் ஆண்டு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி  "9எம்729" என்ற புதிய ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரிப்பதாகவும் அந்த ஏவுகணைகள் 1,500 கிலோ மீற்றர் தூரம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்தவை என நேட்டோ அமைப்பு கூறியுள்ளதாகவும் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டி வந்தது.

இந்த நிலையில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி வருவதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்தார்.

ஆனால், ஒப்பந்தத்தை மீறவில்லை என்று ரஷ்யா மறுத்து வந்தது. அந்த ஏவுகணை 480 கிலோ மீற்றர் தூரம் வரைதான் செல்லும் என ரஷ்யா கூறியது. இதனை அமெரிக்கா ஏற்கமறுத்தது. இதனையடுத்து அந்த ஒப்பந்த நடைமுறைப்படுத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடுமீர் புட்டின் அறிவித்தார்.

இந்தச் சூழலில், தற்போது அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதால், அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே ஆயுதப் போட்டி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் பரவத்தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்த முறிவு இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுப்பது மட்டுமல்ல மீண்டும் பனிப்போர் தொடங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.

இது இவ்வாறிருக்க,ரஷ்யா மற்றும் சீனா இருநாடுகளும் ஒரு புதிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையயழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த யோசனை தொடர்பாக தான் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுடனும் பேசியிருப்பதாகவும் சீனாவும், ரஷ்யாவும் இந்த புதிய ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். 

111 

என்றும் ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த ஒரு முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அடுத்து ஜனாதிபதி டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழமுரசு