அபிநந்தன் விடுதலையில் காட்டிய அக்கறையும் தமிழீழ விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளும்!

செவ்வாய் மார்ச் 05, 2019

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கின்ற இத்தருணத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் அனைத்துலகின் முகமூடிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. கொத்துக் கொத்தாக தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டபோது திரும்பிப் பார்க்காத சர்வதேசம் ஒரேயயாரு உயிருக்காக ஒப்பாரி வைத்ததை ஈழத் தமிழினம் தன் ஊனக் கண்கொண்டு பார்த்திருக்கின்றது.111

 

ஆயுத வல்லமையில், படை வல்லமையில் சம நிலையிலும் மன உறுதியில் அனைவரையும் விஞ்சியும் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை - தமிழ் மக்களின் வேணவாவை - வல்லரசு நாடுகள் சிதைத்து சின்னாபின்னமாக்கின.

அந்த நாடுகளின் போலி முகமூடிகள் தற்போது வெளித்தெரியத் தொடங்கியிருக்கின்றது.
வல்லமை பொருந்தியதாக இருந்த ஈழத்தமிழினம் இராஜதந்திர ரீதியாக பின்னடைவையே கொண்டிருந்தது என்பது தமிழரின் போராட்டம் வீழ்ச்சியடைந்தமைக்கு முக்கிய காரணியாகும். இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தமிழீழ இராஜதந்திரி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரும் இளம் இராஜதந்திரியுமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் இழப்புக்கு பின்னர் தமிழினம் இராஜதந்திரப் போரில் பின்னடைவைக் கண்டது. இன்றுவரை அந்த இழப்பு நிவர்த்தி செய்யப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா அரசின் முகவர்களாகச் செயற்படுகின்றனரே அன்றி, தமிழ் மக்களின் இன விடுதலை தொடர்பாக சற்றேனும் கரிசனையை வெளிப்படுத்தவில்லை.111

 

இந்திய - பாகிஸ்தான் எல்லைச் சமரும் அதனால் ஏற்பட்ட அமைதியின்மையும் தமிழரின் போராட்டத்தை மீண்டும் ஒரு முறை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டுசென்றிருக்கின்றது.

தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு நசுக்கப்பட்டது என்பதை அந்த சம்பவங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் இருந்து போருக்குப் புறப்பட்ட  பாகிஸ்தானில் உயிர்களைக் கொல்லப் புறப்பட்ட   நூற்றுக்கணக்கானோரைப் படுகொலை செய்த ஒரு விமானி பாகிஸ்தானியரிடம் பிடிபட்டபோது, அவரை அடித்து உதைக்கும் காணொளி வெளியாகியது.

அதைப் பார்த்தவுடன் அனைத்துலகின் மனிதநேய நரம்புகள் புடைப்பெடுத்தன. ஐ.நாவுக்கு அழுகை வந்தது. அமெரிக்காவுக்கு கருணை பிறந்தது.

உடனே அறிக்கைகள், கவலைகள், கண்டனங்கள் பறந்தன. பாகிஸ்தானுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ஈற்றில் இரு தினங்களில் போர்க்குற்றவாளி - போர்க்கைதி - அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

அபிநந்தனின் சிறைப்பிடிப்பும் அவரது விடுதலையும் அதனோடு இணைந்த சம்பவங்களும் ஈழத்தமிழரின் போராட்டத்தின்போது அனைத்துலகு செயற்பட்ட விதத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது.

ஒரே ஒரு அபிநந்தனை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்த அனைத்துலகு, ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது அமைதியாக இருந்தது ஏன்?

இறுதி யுத்தத்தில், அனைத்துலகிலும் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டபோது அதை நிறுத்துமாறு குரல் கொடுக்காதது ஏன்?

வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களை சிங்களக் காடையர்கள் சுட்டுப் படுகொலை செய்தமை தொடர்பாக இன்றுவரை அனைத்துலகு மெளனம் காப்பது ஏன்?

பாலச்சந்திரன் உட்பட பல சிறுவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை  செய்யப்பட்டனர்.

அதற்கு எதிராக அனைத்துலகின் எந்த அமைப்பும் கண்டனமோ, கவலைகளோ வெளியிடாதது ஏன்?

ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் உயிருடன் பாரிய கிடங்குகளில் போடப்பட்டு புதைக்கப்பட்டனர். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அழுகை வந்தது? ஈழத்தமிழர்களின் அவலங்கள் அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன. சாட்சியங்கள் உள்ளன. கண்கண்ட சாட்சிகளும் உள்ள
னர்.

இருந்தும் ஐ.நா. இதுவரை இந்த விடயத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?

புலிகள் தமிழ் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துகின்றனர் எனக் கூறிய சிறீலங்கா, புலிகளின் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்ட பின்னர், இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கவில்லை.

இது தொடர்பாக அனைத்துலக சமூகமும் குரல் எழுப்பாதது ஏன்?

ஈழத்தமிழர்கள் வாழத்தகுதியற்றவர்களா? ஒரேயயாரு அபிநந்தனுக்காக அனைத்துக் கண்களும் ஒருசேரக் குவிந்ததைப் போல அன்று ஈழத் தமிழர்களுக்காக ஏன் குவியவில்லை?

இந்தக் கேள்விகளுக்கு அனைத்துலகும் பதிலளிக்குமா?

அபிநந்தனை விடுதலை செய்யுமாறு அனைத்துலகின் அழுத்தத்திற்கு பாகிஸ்
தான் பணிந்ததோ என்னவோ, அந்த விமானியை விடுதலை செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கான நியாயப்பாட்டை எடுத்தியம்பியிருக்கின்றார்.

111

தமிழீழ விடுதலைப் புலிகள் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே போராடினார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக அவர்கள் கோபம் கொண்டனர். அந்தக் கோபத்தின் விளைவாகவே கரும்புலி (தற்கொலை)த் தாக்குதல்களை நடத்தினர் என்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்களை வழங்கிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானுக்கும் இடமுண்டு. பாகிஸ்தானின் கடந்த கால ஆட்சியாளர்கள் சிறீலங்காவுடன் கொண்டிருந்த நட்பு காரணமாக இந்த ஆயுத தளபாடங்கள் வழங்கப்பட்டன.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக பாகிஸ்தானின் தற்போதைய ஆட்சியாளர் இம்ரான் கான் எந்தளவுக்கு புரிந்து வைத்திருக்கின்றார் என்பது அவரது அண்மைய உரை மூலம் தெரியவந்திருக்கின்றது.

இதேபோன்று, அனைத்துலகின் ஆட்சியாளர்களும் தமிழீழ விடுலைப் போராட்டத்தை புரியாமல் இல்லை. ஐ.நா. கூட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை விளங்கிக்கொள்ளாமல் இருக்க முடியாது.

எனினும், அவர்களின் மெளனத்திற்கு காரணம் என்ன?

இனியாவது சர்வதேசம் தமிழர் விடயத்தில் தனது பார்வையைத் திருப்ப வேண்டும். இதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் தமிழர் தரப்பிலும் இருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பலம் பெற்று விளங்கியபோதிலும், சர்வதேசரீதியாக இராஜதந்திர நடைமுறைகளில் ஏற்பட்ட பலவீனமே விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

தற்போது தமிழீழ விடுதலைப் போராட்ட நியாயப்பாடுகளை வெளிப்படுத்த களம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவே தென்படுகின்றது.

பாகிஸ்தான் பிரதமரின் உரை, அபிநந்தனின் விடுலைக்கு அனைத்துலக சமூகம் காட்டிய அக்கறை போன்றவற்றின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டு - மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபோது மேற்படி அனைத்துலக சமூகம் ஏன் அமைதியாக இருந்தது என்பதை வெளிப்படுத்தக் கோரவேண்டும்.  

இதனைச் சாத்தியமாக்குவதற்கு பன்னாடுகளில் தனித்தனியே இருக்கும் தமிழ் அமைப்புக்கள் கூட்டாகக் களமிறங்கவேண்டும்.

தமிழர் தரப்பில் சிறந்த இராஜதந்திரப் பொறிமுறையைக் கட்டியயழுப்ப வேண்டும். உலகின் அனைத்துத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து தமிழின விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும்.

இறுதி யுத்தத்தின் ஆவணப் பதிவேட்டை அவர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அனைத்துலக அம்மியை நகர்த்த முடியும். ஈழத்தமிழரின் இழப்புகளுக்கு நிகரான தீர்வைப் பெறுவதற்கு அனைத்துலகின் செயற்பாட்டைத் தமிழர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அனைத்துலகின் கவனத்தையும் ஈர்க்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

தற்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த முன்வாருங்கள். காலம் தாமதிக்கும்போது நீதி மறுக்கப்படும். இதை பன்னாட்டு தமிழர் அமைப்புக்கள் உணர்ந்துகொள்ளவது நல்லது.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு