ஆப்கானிஸ்தான் ஒரு “மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கிறது

செவ்வாய் செப்டம்பர் 07, 2021

 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ஆப்கானிஸ்தானில் ‘மனிதாபிமான பேரழிவு தலைவிரித்தாடுகிறது’ என எச்சரித்துள்ளார். ஏனெனில் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அரைவாசியான 18 மில்லியன் மக்கள் உயிர் பிழைக்க அவசர மனிதாபிமான உதவி தேவையாகவுள்ளது.

குட்டெரெஸ், “ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒருவருக்கு அவர்களின் அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த ஆண்டில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்,

தற்போதைய 1.3 பில்லியன் டாலர் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான வேண்டுகோளுக்கு 39 சதவிகிதம் மட்டுமே நிதியளிக்கப்படுகிறது. குளிர்கால பனிப்பொழிவு ஓரிரு மாதங்களில் சாலைகளைத் தடுப்பதற்கு முன்பு நாட்டிற்குள் உணவை கொண்டு செல்ல கூடுதல் நிதி தேவை.

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள குப்பைத் தொட்டியில், விறகுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் பிற பொருட்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆப்கானிய குழந்தை டிசம்பர் 15 2019 இல் தேடுகிறது. ஐ.நா புள்ளிவிவரங்களின்படி, உலகிலேயே ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ள ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் தினசரி கடுமையான வறுமை மற்றும் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து இயங்கிய வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்றுவது பற்றி முக்கிய ஊடகங்களின் அனைத்து பரபரப்பு அறிக்கைகளுக்கு மத்தியிலும், நாட்டின் மீது ஏற்படுத்தப்பட்ட பொருளாதார மற்றும் சமூக பேரழிவு பற்றி சிறிதும் கூறப்படவில்லை என்ற உண்மையை குட்டெரெஸின் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

2001 இல் தொடங்கிய அமெரிக்க தலைமையிலான போர் மற்றும் ஆக்கிரமிப்பு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக CIA ஆல் திட்டமிடப்பட்டு அதன் பிராந்திய மற்றும் உள்ளூர் பினாமிகளால் ஆசியாவில் மிகவும் ஏழ்மையான நாட்டிற்கு எதிராக நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு 9/11 தாக்குதலுக்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. 

இது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ தொடர அல்ல, மாறாக வாஷிங்டனின் பூகோள-மூலோபாய நலன்களைப் பின்தொடர்வதற்காக நடாத்தப்பட்டதாகும். அதாவது எண்ணெய் வளம் பெற்ற முன்னாள் சோவியத் குடியரசுகளான காஸ்பியன் பள்ளத்தாக்கு மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள ஒரு நாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் மூலம், மத்திய மற்றும் தெற்காசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்தை பாதுகாக்க நடாத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 1 முதல் 3 டிரில்லியன் டாலர்கள் பெறுமதிமிக்கதாக மதிப்பிடப்பட்டுள்ள தாதுப்பொருட்களால் நிறைந்துள்ளது.

இந்த கொள்ளையடிக்கும் குறிக்கோள்களைப் பின்தொடரும் போர், ஒரு ஆக்கிரமிப்புப் போராகும். இது பாரிய பொய்களால் மறைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தானில் எவ்வித ஆதரவற்றதும் மற்றும் நேட்டோ நாடுகளில் மக்களின் ஆதரவும் அற்ற ஒன்றாகும். இது சர்வதேச சட்டத்தை மீறி, இதையொட்டி பொதுமக்கள் படுகொலைகள், அசாதாரண சித்திரவதை, குவாண்டனாமோ வளைகுடா மற்றும் CIA இனது ‘மறைமுகமான சிறைகள்’ ஆகியவற்றை உள்ளடக்கிய பிற குற்றங்களுக்கு வழிவகுத்தது.

அமெரிக்காவிற்கு குறைந்தது 2 டிரில்லியன் டாலர் செலவான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை அழித்து மக்களை வறுமையில் தள்ளியது. ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் 2020 இல் மனித மேம்பாட்டு அட்டவணையில் 189 நாடுகளில் உலகின் 169 வது ஏழை நாடாக அந்த நாடு தரப்படுத்தப்பட்டது. இப்போது அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் அது மேலும் பொருளாதார சரிவை எதிர்கொள்கிறது.

அமெரிக்க அரசாங்கம் தனது வங்கிகளில் வைப்பிடப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் 9 பில்லியன் டாலர் வெளிநாட்டு நிதி இருப்புக்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளதால் நாட்டின் மொத்த சர்வதேச இருப்புக்களில் தலிபான்களுக்கு வெறும் 0.1-0.2 சதவிகிதம் மட்டுமே கிடைக்கிறது. உலக வங்கி மற்றும் ஓரளவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), அதே போல் அமெரிக்க நிதி சேவைகள் நிறுவனமும் உலகின் இரண்டாவது பெரிய பண பரிமாற்ற சேவைகளை வழங்கும் வெஸ்டேர்ன் யூனியன் ஆப்கானிஸ்தானுடன் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டது. சர்வதேச நாணய நிதியம் அதன் சிறப்பு மீளப்பெறும் உரிமைகளினால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட 340 மில்லியன் டாலர்கள் மானியத்தையும் முடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நாணயத்தின் பெறுமதிக்கு உந்துதல் வழங்கிவந்த அமெரிக்க டாலர் அதனை திடீரென முடிவிற்கு கொண்டுவந்ததால் அதன் மதிப்பு 10 சதவிகிதம் சரிந்துள்ளது. வங்கிகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. மீண்டும் திறக்கப்பட்ட சில வங்கிகளுக்கு வெளியே நீண்டகால மக்கள் தங்கள் சேமிப்பை பெறமுயற்சித்ததால், தலிபான்கள் வாரத்திற்கு 200 டாலர்களுக்கு சமமாக பணத்தை மட்டுமே எடுப்பதைக் கட்டுப்படுத்தியுள்ளது.

நாணயம் மேலும் வீழ்ச்சியடைவதால், விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரவிருக்கும் மாதங்களில் கடந்த மூன்று வருடங்களில் இரண்டாம் முறை வந்த கடுமையான வறட்சியால் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் அவை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளன. இது பயிர் உற்பத்தியில் 40 சதவிகிதம் இழப்பு மற்றும் கால்நடைகள் மீது ‘பேரழிவு தரும் தாக்கத்திற்கு’ வழிவகுத்தது. பருப்பு விலை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் காய்கறி எண்ணெயின் விலை பட்டாணிக்கடலை மற்றும் அவரைப்பருப்பின் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

Reliefweb இன் கூற்றுப்படி, இந்த சமீபத்திய நெருக்கடிக்கு முன்பே, 3.1 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 2020 இல் கோர் மாகாணத்தில், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 15.9 சதவிகிதம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.4 சதவிகிதமான குழந்தைகள் பட்டினியின் கொலைகார வடிவமான மிகக்கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. 45.5 சதவிகித குழந்தைகள் முழு வளர்ச்சி குன்றிய அல்லது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கி, வேலைக்குச் செல்வோர் உட்பட கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 2020 இல் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள வருமானத்தில் வாழ்ந்தனர் என அறிவித்தது. மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கமுடியாத கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். போதுமான உணவு உட்பட வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய முடியாதுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் வறுமைக் கோட்டுக்கு சற்று கூடுதலான வருமானத்துடன் மட்டுமே வாழ்கின்றனர்.

சுமார் 70 சதவிகித மக்கள் வெறும் 12 சதவிகிதம் விளைநில விவசாயத்திற்கும் 46 சதவிகிதம் கால்நடை மேய்ச்சலுக்கும் ஏற்ற கிராமப்புற நிலப்பரப்பில் வாழ்க்கையை கழிக்கிறார்கள். 40 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில்லாதவர்கள் அல்லது பகுதிநேர வேலையுள்ளவர்களாக இருக்கின்றனர்.

மக்கள் தொகையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 400,000 இளவயதினர் தொழிலாளர் சந்தையில் நுழைகிறார்கள். அரசாங்க பணிகள் மற்றும் இராணுவத்தைத் தவிர, தற்போதுள்ள வேலைகள் முக்கியமாக மோசமாக ஊதியம் பெறும் தினக்கூலி அல்லது சாதாரண வேலைகளாக உள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி பெற்ற ஆயுதக்குழுக்கள் அல்லது குற்றவியல் கும்பல்களில், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல்காரர்களாக சேர்வதை தவிர வேற் மாற்றீடு இல்லை.

உலக வங்கியின் கூற்றுப்படி, அரசாங்கச் செலவில் சுமார் 75 சதவிகிதம் சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய அரசாங்கங்களால் நிதியளிக்கப்படுகிறது. தலிபான் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப் படைகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குவதாகக் கூறினாலும், அவர்கள் எப்படி அதைச் செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, இதனால் இலட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவிகிதம் வெளிநாட்டு உதவிகளிலிருந்து வருகிறது. இது பெரும்பாலும் உள்ளூர் பொருளாதாரத்தை பலமிழக்க செய்கின்றது. இது, பாதுகாப்பின்மை, வறட்சி மற்றும் இயற்கை பேரழிவுகளுடன், ஆப்கானிஸ்தானின் போர்ப்பிரபுக்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் இதனால் ஏழை விவசாயிகள் கஞ்சா சாகுபடி மற்றும் அபின் வணிகத்தை நோக்கி திரும்புகின்றனர்.

நாட்டின் செல்வம் ஒரு சில குடும்பங்களின் கைகளில் உள்ளது. அது வெளிநாட்டு இராணுவ ஒப்பந்தங்களின் பரந்த வருகை மற்றும் வணிகத்தின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து இலாபம் பெற்றது. ஆப்கானிஸ்தானின் பணக்கார 10 சதவிகிதமானோர் பொருளாதாரத்தையும் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்துகிறனர்.  அதே நேரத்தில், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெருமளவில் நடத்தப்பட்ட போர், ஆப்கானிஸ்தானின் தெற்குக்கும் வடக்கிற்கும் இடையே வருமானம், செல்வம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது.

நான்கு தசாப்த கால மோதலும் அதன் விளைவுகளும் ஆப்கானிஸ்தானை உலகின் அதிகளவிலான அகதிகள் உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஆப்கானியர்கள் உலகின் மிக நீண்ட இடம்பெயர்ந்த மற்றும் நீண்டகாலமாக வெளியேற்றப்பட்ட மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாதவர்களாக ஒவ்வொன்றிலும் சுமார் 3 மில்லியன் மக்கள் பாகிஸ்தான் அல்லது ஈரானால் ஆதரவளிக்கப்படுகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜேர்மனி, பிற ஐரோப்பிய நாடுகளும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே மிகக்குறைந்த அளவிலான அகதிகளை ஏற்றுக்கொள்வதை இன்னும் குறைத்த பின்னர் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்த அமெரிக்காவிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஆண்டு, 604 ஆப்கானிஸ்தான் அகதிகளை மட்டுமே அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆகஸ்ட் 2020 இன் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானுக்குள் மேலும் நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குடிநீர் அல்லது சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் அவர்களுக்கு மிகக் குறைந்தளவிலேயே கிடைக்கிறது. மற்றும் போதிய குடியிருப்பு, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் போதிய சுகாதார வசதியின்மை ஆகியவற்றுக்கு மத்தியில் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். இந்த நிலைமை கோவிட் தொற்றுநோயால் மிகவும் ஆபத்தானது. பொது குடியிருப்புகளில் சுகாதாரம் மற்றும் சிகிச்சை இலவசம் என்றாலும், குடும்பங்களால் அங்கு செல்வதற்கான போக்குவரத்து செலவைக் கூட வழங்க முடியாதுள்ளது.

சமீபத்திய நாட்களில், நேட்டோவின் படைகள் திரும்பப் பெறுதல் மற்றும் தலிபான் முன்னேற்றியமை காரணமாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதாக ஐநா அகதிகள் நிறுவனம் (UNHCR) தெரிவித்தது. இது ஜனவரியிலிருந்து இன்னும் 360,000 மக்களை தமது வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்தித்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடென் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களின் நனவில் இந்த பேரழிவு தரும் சூழ்நிலைகளின் தாக்கமே வாஷிங்டனின் பொம்மை ஆட்சியின் விரைவான சரிவுக்கு வழிவகுத்தது. அஷ்ரப் ஹானியின் அரசாங்கத்தின் விரைவான வீழ்ச்சியை, ஆப்கானிஸ்தானின் மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றச்செயல்களின் அளவால் மட்டுமே விளக்க முடியும். அவர்கள் தங்கள் சமுதாயத்தை அழித்ததைக் கண்டனர். இந்த போரின் நேரடி விளைவாக சுமார் 170,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 360,000 பேர் நோய், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நில கண்ணிவெடிகளால் மறைமுகமாக இறந்தனர்.

இவை உலக வரலாற்று குற்றங்களாகும். இதற்கான குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படாததோடு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஏகாதிபத்திய மையங்களுக்குள் அதிகாரத்தின் முன்னணிப் பதவிகளை வகிக்கின்றனர்.