அரை நிர்வாண விசாரணை... தூக்கில் தொங்கிய அப்பாவி! இன்னுமொரு சாதிப் பஞ்சாயத்து கொடூரம் : விகடனிலிருந்து

புதன் நவம்பர் 18, 2015

ட்டப் பஞ்சாயத்துகள், கிராமப் பஞ்சாயத்துகள், ஊர்ப் பஞ்சாயத்துகள் , சாதிய பஞ்சாயத்துகள் என்றுதான் எத்தனை முகங்கள் இந்த பஞ்சாயத்துகளுக்கு? நீதிமன்றங்களை விட இவர்களின் 'நாட்டாமை'த் தனத்துக்குத்தான் பல இடங்களில், இன்னமும் மக்கள் அடிமைப்பட்டு அடங்கிக் கிடக்கிறார்கள்.

அப்படி கூட்டப்பட்ட ஒரு உயர் சாதி (மரத்தடி-வித் சொம்பு) பஞ்சாயத்து, கடந்த 9-11-2015 அன்று நெல்லை- குமரியின் சந்திப்பில் வருகிற ராதாபுரம் தாலுகா, பிள்ளையார் குடியிருப்பில் நடந்திருக்கிறது.

பஞ்சாயத்து தீர்ப்பின்படி பொதுவெளியில் செருப்பால் அடித்து அவமானப்படுத்தப்பட்டுள்ளான், இருபதே வயதான பாலிடெக்னிக் மாணவன் பொன்தாமரைச் செல்வன். அவமானத்தோடு வீட்டுக்கு வந்தவன், மின்விசிறியில் தூக்கில் தொங்கி விட்டான்.

தலித் வகுப்பைச் சேர்ந்த பொன்தாமரைச்செல்வன் மரணத்தில் மர்மங்கள் நிறைய என்ற தகவல் வரவே, அது குறித்த தீவிரமாக தகவலை சேகரித்துக் கொண்டிருக்கும் 'எவிடென்ஸ்' கதிரின் கருத்தை அறிய அவரிடம் பேசினோம்.

''தினமும் மருந்து மாத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜதுரை- சரோஜா தம்பதியருக்கு பொன்தாமரைச்செல்வன் ஒரே பிள்ளை. பாலிடெக்னிக் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளான். பகுதி நேரமாக காற்றாலை நிறுவனத்தில் அவன் வாங்கி வந்த சொற்ப வருமானமே வீட்டுக்கு உதவி வந்திருக்கிறது. கடந்த எட்டாம் தேதி இவனும், எதிர்வீட்டில் வசிக்கும் மணிமுத்து நாடாரின் மகன் ஐயப்பனும் பக்கத்தில் இருக்கும் ஆவரக்குளத்தில் குளிக்கப் போயிருக்கிறார்கள்.

போன இடத்தில் ஐயப்பனுக்கும், ஆவரக்குளம் இளைஞர்களுக்கும் ஏதோ தகராறு. அப்போது தலையிட்டு இருதரப்பையும் பொன்தாமரைச்செல்வன் மடக்கி விட்டிருக்கிறான். அந்த விஷயம் அத்தோடு முடிந்து போனது.

இந்த விஷயத்தை (8-11-2015) அன்று மாலையே தண்டோரா போட்டு 'உங்க ஊர்ப்பசங்க குளிக்கப்போன இடத்துல சண்டை போட்டுட்டு அங்கே செல்போனையும், பணத்தையும் திருடிக்கிட்டு வந்துட்டாங்க. நாளை காலை 9 மணிக்கு பஞ்சாயத்துல ஆஜராகச் சொல்லி ஆவரக்குளம் பஞ்சாயத்து உத்தரவு' என்று சொல்லி விட்டுப் போய் விட்டனர்.

தண்டோரா தகவலின்படி ஐயப்பனும், பொன்தாமரைச்செல்வனும் மறுநாள் காலையே அங்கே போய்விட்டனர். ஊர் மிராசு, நாட்டாமை லெவலில் நான்கு பேர் சேர்ந்து அந்த பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அங்கே ஐயப்பனை சாதாரணமாக விசாரித்துள்ளனர். பொன்தாமரைச்செல்வனை ஜட்டியுடன் மரத்தில் கட்டி வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் ஆளாளுக்கு செருப்பால் அடித்துள்ளனர். அதன் பின்னர், 10 ஆயிரம் அபராதத்துடன் நாளைக்கு பஞ்சாயத்துக்கு வர வேண்டும் என்று தீர்ப்பை சொல்லியுள்ளனர்.

சோகம், அவமானம் என்று மிகுந்த மன அழுத்தத்துடன் வீட்டுக்கு வந்த பொன்தாமரைச்செல்வன் வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிவிட்டான். உடலை கைப்பற்றிய பழவூர் போலீசார் இருந்த ஸ்டேசனுக்கே நேரில் வந்து விசாரணையைத் தொடங்கிய வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, பஞ்சாயத்தைக் கூட்டிய ஊர் மிராசு உள்ளிட்ட அனைத்து பஞ்சாயத்தாரையும் வரவழைத்து, சரியான பாதையில் விசாரணையை கொண்டு போயிருக்கிறார்.

ஆனால், எங்கிருந்தோ வந்த போன் அவரை 'சைலன்ட்' ஆக்கி விட்டது. அதன் விளைவு, நியாயமான விசாரணையை கேட்டு பொன்தாமரைச்செல்வனின் பெற்றோர், ஊர் மக்கள் 9-ம் தேதியிலிருந்து, 13-ம் தேதி வரை ஐந்து நாட்கள் சடலத்தை கையில் வைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இது குறித்த முழுமையான நேரடி விசாரணையை நாங்கள் முடித்திருக்கிறோம். மாணவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு உதவியும், ஆதரவற்ற அவன் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்கக் கோரி கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் பல இடங்களில் இப்படியான சாதிய பஞ்சாயத்துகள் நடக்கின்றன. இவைகள் முடிவுக்கு வரவேண்டும். இல்லையெனில் இதுபோன்ற மரணங்களை தவிர்க்கவியலாது!’’ என்று வேதனையுடன் குறிப்பிடுகிறார் எவிடென்ஸ் கதிர்.

நன்றி: விகடன் இணையதளம்