அரச பயங்கரவாதத்திற்கு முண்டு கொடுக்கும் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம்!

வியாழன் பெப்ரவரி 07, 2019

புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான  Counter Terrorism Act (CTA ) சட்டமூலம் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகள் இச்சட்டத்திறகு எதிர்ப்புத் தெரிவித்தாலும், பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ள சிங்களப் பேரினவாத கட்சிகள் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக்காட்டுகின்றன.

நிரந்தரமாக சட்டமாக்கப்பட்டால், தேடுதல், கைது விசாரணை, கடும் கண்காணிப்பு ஆகிய அதிகாரங்களை காவல்துறையிருக்கும் சிறீலங்காப் படையினருக்கும் வழங்கப்படு
கிறது.

அதுமாத்திரமல்ல ஜனநாயக வெளிகளை ஒடுக்குகின்ற தன்மையுடன் இத்தகைய சட்டமூலத்திற்குள் காணப்படுகின்றன. மிகவும் முக்கியமாக பொது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரச வன்முறைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க புதிய சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.

பொதுச்சேவை ஒன்றை அத்தியாவசியத் தேவையாக பிரகடனப்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று அதிபருக்கு காணப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது கவனஈர்ப்புப் போராட்டங்கள் என எதனையும் செய்ய முடியாது.

இச்சட்டத்தில் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறும் சட்டமாகவே இது நோக்கப்படுகிறது.

தற்போதுள்ள சட்டத்தில் ஒருவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமாகயிருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும். இச்சட்டத்தில் அவ்வாறு இல்லை. காவல்துறை அல்லது படையினர் தாம் விரும்பியதைச் செய்ய முடியும். குற்றவியல் சட்டத்திலுள்ள பிடியாணை இங்கு செல்லுபடியற்றது.

Counter Terrorism Act (CTA) தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மேலாக இறுக்கமான சட்டமூலங்கள் உள்ளடக்கியுள்ளது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை தடுத்துவைப்பதற்கு எதிரான மேல்முறையீடு மீதான கட்டுப்பாடு போன்ற சாதாரண சட்டத்திற்கு முரணான சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

தற்போதுள்ள சட்டத்தில் நீதவான் தவிர்ந்த வேறு எந்த அதிகாரிகளுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கத் தேவையில்லை. அவ்வாறு, கைதிகளை பார்வையிடுவதற்கு மனித உரிமை அமைப்புக்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் இளைஞர்கள், யுவதிகள் மட்டுமின்றி வைத்தியர்கள், பொறியியளாளர், உள்ளக சர்வதேச ஊடகவியலாளர்கள், கோவில் தர்மகர்த்தாக்கள், கிறிஸ்துவ மதபோதகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசசார்பற்ற அமைப்பின் அதிகாரிகள், சுங்க திணைக்களத்தின் உயரதிகாரிகள், ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், புலம்பெயர் தமிழர்கள், வங்கி முகாமையாளர் என சமூகத்தின் பல தரப்பட்டவர்களையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் பல வருடங்களாக சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்.

சிறு குற்றங்களைச் செய்தவர்களும் பாரிய தண்டனைகளை அனுபவிக்கின்றார்கள். ஆனால், பாரிய குற்றங்களைச் செய்தவர்கள் பெரிய நபர்களாக சுதந்திரமாக உலா வருகின்றனர்.

பயங்கரவாதச் தடைச் சட்டமானது எமது தமிழ் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. இந்தச் சட்டத்தின் மூலம் இளைஞர்கள் பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவி ஜோன் லெம்பட் அண்மையில் தெரிவித்திருந்தார், சுமார் நாற்பது வருடங்களாகத் தொடர்ந்து நடைமுறையில் உள்ள கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த வருடம் அரசு உறுதியளித்திருந்தது.

ஜிஎஸ்பி வரிச்சலுகைக்கு முன் நிபந்தனையாக முன்வைக்கப்பட்ட இந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன? என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அனைத்துலக மனித உரிமை வரையறைகளுக்கு ஏற்ற புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று 2016 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசு உயர் அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

அது நிறைவேற்றப்படும் என்று எங்களிடம் கூறப்பட்டது. எனவே, துரிதமாக மாற்றங்கள் ஏற்படும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம்.

அரச பயங்கரவாதத்திற்கு...

ஆனால் அது நடைபெறவில்லை. ஜிஎஸ்பி வரிச்சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது தானே என்று, இந்த சலுகையை பெற்றுக்கொண்டோர் ஆறுதலுடன் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்ததை விட தாமதமாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுசிறது. உறுதி மொழி வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும், இன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.

சட்டம் என்பது யாவருக்கும் சமம். ஆனால் சிறீலங்காவைப் பொறுத்தளவில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படாது, பதவி உயர்வுகளும், வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தற்போது புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவது குறிப்பாக தமிழ் மக்கள் என்பதுதான் உண்மை.

இப்புதிய சட்டமானது சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது அவிழ்த்துவிடக்கூடிய அடக்குமுறை அதிகாரத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது. ஒருவரை சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் நிலைமையை ஏற்படுத்த இச்சட்டம் முனைகிறது. பயங்கரவாதத்தை முறியடித்தல் எனும் போர்வையில் மக்கள் மீது அரச ஒடுக்குமுறையைக் கட்டவிழ்ப்பதற்கு நிறைவேற்று அதிகாரத்தினுடைய கைகளைப் பலப்படுத்துகிறது.

இவ்வாறான கடுமையான இறுக்கங்களைக் கொண்டுள்ள இச்சட்ட மூலத்தை தடுப்பதற்கு முயற்சிக்காமல் சில மனித உரிமை அமைப்புக்கள் மெளனம் கடைப்பிடிப்பது அவர்களின் தர்மத்தை மீறும் செயலாகும்.
 

-கிழக்கில் இருந்து எழுவான்-

நன்றி: ஈழமுரசு