அரசாங்கத்திற்கு வழங்கும் எமது ஆதரவை விலக்குவோம்!

புதன் ஜூன் 19, 2019

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாது விட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும்  எமது ஆதரவை  விலக்குவோம் என  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இன்று சபையில் எச்சரித்தார். 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவிடக்கூடாதென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் எம்.பி.யான ஹரிஷுமே மிகத்தீவிரமாகவுள்ளனர். இவர்களுக்காக எமது நியாயமான கோரிக்கையை அரசு உதாசீனம் செய்கின்றது. இந்த அரசையும்  ஜனாதிபதியையும் பிரதமரையும் கொண்டு வந்தவர்கள் நாங்கள். அந்த நன்றிக்கடன் உங்களுக்கு இருக்கின்றதா எனக்கேட்க விரும்பு கின்றோம். 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக அரசு தரமுயர்த்தாது விட்டால் அரசுக்கான தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவை விலக்குவோம். இப்போது கூட தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே நாம் ஆதரவளித்து வருகின்றோம். இனியும் எமது மக்களை நாம் சமாதானப்படுத்த முடியாது. எனவேதான் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலைமை ஏற்படக்கூடாதெனில் அங்கு தற்போது நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்றார்.