அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு திமுக துணைநிற்கும்: திமுக தலைவர் கருணாநிதி

செவ்வாய் நவம்பர் 17, 2015

 

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 044-2432 0280, 78108 78108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு திமுக துணையாக நிற்கும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நவம்பர் 16 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழை மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களது வீடுகளை இழந்த பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் கவலை அளிக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழக மக்களைக் காப்பாற்ற அரசு எடுக்கும் அனைத்து நிவாரணப் பணிகளுக்கும் திமுக தனது முழு ஆதரவை அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044 – 2432 0280, 78108 78108 ஆகிய எண்களில் திமுக தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அதுபோல திமுக மாவட்ட அலுவலகங்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திமுக தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொள்வார்கள்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.