“அரசியல் பேசாதீர்கள், வேலையை பாருங்கள்”!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019

பணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் டிரம்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் டிரம்பின் பிரசாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டு உள்ளது” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். டிரம்ப் இதனை சுட்டிக்காட்டி கூகுள் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் கூகுள் நிறுவனமோ தாங்கள் ஒற்றைச் சார்புடனோ, அரசியல் சார்புடனோ ஒருபோதும் செயல்படவில்லை என உறுதிபட கூறியது.

இந்த நிலையில், இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க பணி நேரத்தில் அரசியல் விவாதங்களை கண்டிப்பாக தவிர்த்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கூகுள் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவுரையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சக ஊழியர்களுடன் தகவல்களையும் யோசனைகளையும் பகிர்வது சமூகத்தை உருவாக்க உதவுகிறது. அதே சமயம் அரசியல் குறித்த சீற்றமான விவாதம் வேலை நேரத்தை சீர்குலைக்கிறது. எனவே கூகுளின் பணியிட கொள்கைகளை மீறும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் உரையாடல்களை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.