அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிக்கிறேன்!

சனி ஓகஸ்ட் 03, 2019

கர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருபான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. என்றாலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கு குமாரசாமி முதல்வராக இருப்பது பிடிக்கவில்லை.

இதனால் அவர் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே சோதனைகளை சந்தித்து வந்தார். என்றாலும், சமாளித்துக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். இறுதியாக அவருக்கு எதிராக 14 எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியதுடன் ராஜினாமாவும் செய்தனர். இதனால் அவரது ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனால் 14 மாதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அரசியலில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் ‘‘தற்போதைய அரசியல் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். ஜாதி மோகம் பற்றிய அரசியல் நல்ல மக்களுக்கானது அல்ல. என்னுடைய குடும்பத்தை கொண்டு வரமாட்டேன். நான் அரசியலில் இருந்து விட்டேன். தற்போது என்னை அமைதியாக வாழ விடுங்கள். அரசியலில் தொடரமாட்டேன். நான் அரசியலில் இருக்கும்போது சிறப்பாகவே செய்தேன். மக்களுடைய மனதில் இடம் பிடிக்க விரும்புகிறேன்.

 

குமாரசாமி


அரசியலில் இருந்து விலகுவதை குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. அதேபோல் முதல்வரானதும் ஒரு விபத்தே. கடவுள் எனக்கு இரண்டு முறை முதல்வராகும் வாய்ப்பை வழங்கியுள்ளார். இதைவிட மற்றவைகளால் திருப்தியடைய முடியாது. 14 மாதங்களாக நான் மாநில வளர்ச்சியை நோக்கி வேலை செய்துள்ளேன். எனக்கு அந்த திருப்தி உள்ளது’’ என்றார்.