அரசு பதவி விலக வலியுறுத்தல்: 6-வது நாளாக லெபனானில் போராட்டம்!

புதன் அக்டோபர் 23, 2019

லெபனானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அரசு பதவி விலக வேண்டும் என்று ஆறாவது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லெபனானில் நிலவும் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தல், டயர்களை எரித்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது.

”எங்கள் பணத்தை திரும்பக் கொடுங்கள்” என்று தலைநகர் பெய்ரூட் போராட்டக்காரர்கள் முகத்தில் வித்தியாசமான ஒப்பனைகளைச் செய்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட 19 வயதான மாணவர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்” என்றார்.

லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றறும் பிரதமர் சாத் அல் ஹரிரி 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதக் கூட்டத்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் தொடங்கினர்.