அரிச்சந்திரன் பதில்கள்...

செவ்வாய் சனவரி 14, 2020

கேள்வி:- ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று காலம் காலமாகச் சொல்கின்றோம். இன்று வரை வழி பிறந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்தும் இதனையேதான் தமிழர்கள் நாம் சொல்லிக்கொண்டு இருக்கப்போகின்றோமா..?

நகுலேஸ்வரன் நாகரஞ்சன் (பொபினி பிரான்ஸ்)

111

பதில்:-‘போராடுபவனுக்கே இந்த உலகம் சொந்தம்’ என்றான் ஒரு கவிஞன். ‘ஓடாத மானும், ஓடாத ஆறும் உயிர்வாழ முடியாது’ என்றான் இன்னொரு கவிஞன். இயங்கிக்கொண்டே இருந்தால்தான் உயிர்கள் மட்டு
மல்ல சடப்பொருள்கூட வாழ முடியும் என்பது இயற்கையின் விதி. இதில் மனிதன் மட்டும் விதிவிலக்கா என்ன?

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது வெறும் நம்பிக்கை மட்டும்தான். ஆனால், அந்த நம்பிக்கை தரும் உற்சாகம், ஒருவரை இயங்கவைக்கின்றது.

இயங்குதல் என்பதே வெற்றிக்கான முதல் அடிதான். அந்த முதலடியுடன் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த அடிகளை எடுத்து முன்னேறினால் வழி தி(பி)றக்கும்.

அண்மையில் முகநூலில் நண்பரொருவர் சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் பதிவொன்றை இட்டிருந்தார். அந்தப் பதிவையே உங்கள் கேள்விக்கான இன்னொரு பதிலாகவும் இங்கே தருகின்றேன்.

‘இத்தனை வருடங்களாக ஓடியும் இதுவரை வெற்றிபெறவில்லை என்பதற்காக நாம் வருத்தமடையத் தேவையில்லைஏனெனில், இத்தனைக்கு பிறகும் நாம் நின்றுவிடாமல் ஓடுகிறோம் என்பதே பெருமைதான்.

எதுவுமே எளிமை இல்லைதான். ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.

ஒரு மரத்தை வெட்ட 6 மணி நேரம் கிடைத்தால், புத்திசாலி தன் கோடரியை கூர்மையாக்க  4 மணி நேரத்தை செலவு செய்வான். அதுபோல நமக்கும் நம்மை கூர்மைப்படுத்த தக்க நேரம் கிடைத்திருக்கிறது எனக் கொள்வோம்.

மண்ணில் விழுந்த விதைகூட போராடியே முளைக்கிறது. காலில் மிதிபடும் புழு கூட துடித்து எழுகிறது

தமிழன் மட்டும் வீழ்ந்து கிடந்துவிடுவானா என்ன? மீண்டும் எழுவோம்...’

தை பிறந்தால் வழி பிறக்கும், துணிந்தெழுந்தால் தடை உடைக்கும்.  

கேள்வி:- எங்கள் வீட்டில் ‘மதுரை ஆட்சி’ நடக்கின்றது. ‘சிதம்பர ஆட்சியாக’ மாற்றுவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் அரிச்சந்திரனே..?

கந்தசாமி ரகுவரன் (பரிஸ் பிரான்ஸ்)

பதில்:-  எதற்கு மதுரை, சிதம்பரம் என்று தனித்தனி ஆட்சி? இருவரும் இணைந்து திருச்செங்கோடாக (அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம்) ஆட்சி நடத்துங்களேன். கணவன் - மனைவி சரிபாதி என்
பதை உணர்ந்து சிவனே தனது உடலில் பாதியை மனைவிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக மாறிவிட்டார், மனிதர் உங்களுக்கு ஏன் இந்த ஏட்டிக்குப் போட்டி? கணவன், மனைவி இருவரும் ஒன்றிணைந்து புரிந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை. ஆட்சியை யார் நடத்துவது, அடிமைப்பட்டு யார் கிடப்பது என்பதா வாழ்க்கை?

111

இந்த வேளையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் திருமண நிகழ்வொன்றில் கூறிய கதைதான் நினைவுக்கு வருகின்றது. அவர் சொன்ன கதையை இப்ப நீங்களும் ஒருக்கா கேளுங்கள்...
முடிவில் வீட்டில் மதுரை ஆட்சியா, சிதம்பர ஆட்சியா? அல்லது திருச்செங்கோடு ஆட்சியா? என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

‘‘கபீர்தாசர் என்பவர் ஒரு மிகப் பெரிய ஆன்மிகவாதி. ஒரு நாள் கபீர்தாசர் இல்லத்தில் ஏகப்பட்ட பக்தர்கள். எல்லோரும் அவரிடம் ஆன்மிகச் சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கபீர்தாசர்.

நண்பகல் 12 மணிக்கு எல்லோரும் போய்விட்டனர். ஆனால், ஒருவர் மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தார். ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கபீர்தாசர் கேட்டார். அதற்கு பதில் சொல்லத் தயங்கினார் அந்த மனிதர். உடனே கபீர்தாசர், ‘உங்கள் முகத்தில் காணப்படுகிற அறிகுறிகளைப் பார்த்தால், உங்களுடைய இல்வாழ்க்கை இன்பமாக இல்லை என்று தோன்றுகிறது, அப்படித்தானே?’ என்று கேட்டார்.

‘அப்படித்தாங்க. என்னுடைய மனைவியும், நானும் சந்தோசமாக குடும்பம் நடத்தவில்லை. எப்பொழுதும் சண்டை தான். நான் என்ன சொன்னாலும், அவள் கேட்பதில்லை. எதிர்த்து பேசுகிறாள். கோபப்படுகிறாள். ஆத்திரப்படுகிறாள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை’ என்றார், அந்த மனிதர்.

உடனே கபீர்தாசர், ‘இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க. யோசனை செய்து பதில் சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னர், ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். நூல் கண்டில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தார்.

அப்போது, மனைவியை கூப்பிட்டு ‘விளக்கை ஏற்றி எடுத்து வா’ என்று சொன்னார். அந்த அம்மையாரும் ஒரு விளக்கை ஏற்றி எடுத்து வந்து அவர் பக்கத்திலே வைத்தார். இவ்வளவு வெளிச்சம் இருக்கும் போது, கபீர்தாசர் தான் விவரம் இல்லாமல் விளக்கு கொண்டு வரச் சொன்னால், அந்த அம்மையாரும் விளக்கு கொண்டு வருகிறாரே என்று நினைத்து, திகைத்துப்போனார் அந்த மனிதர்.

சிறிது நேரம் கழித்து, அந்த அம்மையார் இரண்டு டம்ளர்களில் பாலை எடுத்துக் கொண்டு வந்து, அவர்கள் முன்பு வைத்தார். பாலை குடிக்க ஆரம்பித்த அந்த மனிதரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. பாலை அவரால் குடிக்க முடியவில்லை.

ஏனெனில், கபீர்தாசரின் மனைவி தவறுதலாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக, உப்பை போட்டிருந்தார். அந்த பக்தர், கபீர்தாசரைக் கவனித்தார். கபீர்தாசரோ, கிடுகிடுவென்று பாலை குடித்தார். பாலை குடித்து முடிக்கும் தருவாயில், அவரது மனைவி சமையல் கட்டில் இருந்து கொண்டே, ‘பாலுக்கு சர்க்கரை சரியா இருக்கிறதா?’ என்று கேட்டார். இதற்கு கபீர்தாசர், ‘சரியாக இருக்கிறது’ என்று சொன்னார்.

இதையயல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் கபீர்தாசரை நெடுஞ்சாண்கிடையாக வணங்கினார். உடனே கபீர்தாசர், அந்த மனிதரைப் பார்த்து ‘என்னவோ கேட்க வேண்டும் என்று கூறினாயே?’ என்று கேட்டார்.

அதற்கு அந்த மனிதர் ‘ஒன்றும் கேட்க வேண்டாம் ஐயா. நண்பகலில் நீங்கள் விளக்கேற்றி வைக்கச் சொல்கிறீர்கள். உங்கள் மனைவியும் விளக்கேற்றி வைக்கிறார். உப்பு போட்ட பாலில் சர்க்கரை சரியாக இருக்கிறதா? என்றால் சரியாக இருக்கிறது என்று நீங்கள் பதில் கூறுகிறீர்கள். எனக்கு எல்லாம் புரிந்துவிட்டது’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.’’

அதாவது, கணவனை மாற்ற வேண்டும் என்று மனைவி நினைக்காமலும் மனைவியை மாற்ற வேண்டும் என்று கணவன் நினைக்காமலும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு புரிந்துகொண்டு வாழ்ந்தாலே, இல்லற வாழ்வு அமைதியாக, இனிமையாக, சொர்க்கம் போல் இருக்கும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துரைக்கிறது, என்றாராம்.

கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி
இலத்திரனியல் முகவரி :   eelamurazu@gmail.com
தபால் முகவரி : Media Centre, BP 40, 93141 Bondy pdc
குறுந்தகவலாக  (கைபேசி SMS)  : 00 33 7 81 80 81 16

நன்றி: ஈழமுரசு

111