அரிச்சந்திரன் பதில்கள்...

வெள்ளி பெப்ரவரி 07, 2020

கேள்வி:- அவசரக் கேள்வி. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசில் இருந்து தப்பிப்பதற்கு என்ன வழி அரிச்சந்திரனே.

கதிர்காமநாதன் சங்கரன் பிரான்ஸ்

பதில்:- 
‘ஒவ்வொரு விநாடியும் யாரோ ஒருவர்
இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறார்.
விரும்பியும் விரும்பாமலும்
நாம் அனைவரும் இந்த வெளியேறும்
வரிசையில் நின்றுகொண்டுதான் இருக்கின்றோம்.
எங்களுக்கு முன்னும் எங்களுக்குப் பின்னும்
எத்தனை பேர் இருக்கிறார்கள்
என்பது எவருக்கும் தெரியாது.
நாம் இந்த வரிசையில் இருந்து
ஒருபோதும் விலகிச்செல்ல முடியாது
வரிசையில் சென்று முடிவை
அடைந்தேதான் ஆகவேண்டும்
சிலர் வேகமாக முன்னோக்கிச் செல்வார்கள்
சில மெதுவாக நகர்ந்து வருபவார்கள்.
ஆனாலும் ஒருவராலும்
பின்நோக்கியும் செல்லமுடியாது
முன் நகர்வதையும் நிறுத்த முடியாது.
முடிவை அடைவதைத் தடுக்கவும்
தவிர்க்கவும் யாராலும் முடியாது.’
எங்கோ படித்த இந்த வரிகள் மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அது தவிர்க்கவும், தடுக்கவும் முடியாதது. ஆனால், அந்த மர
ணத்தை தாமதப்படுத்த முடியும். அதற்கான பாதுகாப்பு வழிகளைத் தேடுங்கள். கொரோனா என்ன கோபுராவும் (நாகபாம்பு) உங்களை நெருங்கமுடியாது.

                                                                        (*)(*)(*)(*)

கேள்வி:-  திறமை இருந்தால் முன்னேறமுடியும் என்கின்றார்கள். திறமை இருந்தும் என்னால் முன்னேற
முடியவில்லையே அது ஏன்?

சிவப்பிரகாசம் பிரியதர்சன் (பொபினி பிரான்ஸ்)

பதில்:-  அந்தத் திறமையை உங்களுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை என்று நினைக்கின்றேன். இந்தக் கதையைப் படியுங்கள்...

பொறியியளாராக பட்டம் பெற்ற ஒருவர் நீண்டகாலமாக வேலை கிடைக்காமல் திண்டாடினார். கடைசியாக வேறு வழியின்றி ஒரு முடிவிற்கு வந்து சிறிய மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். வாசலில் ஒரு விளம்பரப்பலகையை வைத்து, அதில் ‘எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாவில் குணப்படுத்தப்படும்.

உங்கள் வியாதி குணமாகவில்லையயனில், 1000 ரூபா திருப்பித் தரப்படும்’ என்று எழுதி வைத்தார்.
இதைக் கவனித்த, மருத்துவமனை வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், போலிப் பொறியியளாள மருத்துவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.

‘டொக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல...’ என்றார்.

‘நேர்ஸ் அந்த 8ம் நம்பர் போத்தலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க’ என்றார் பொறியியள மருத்துவர். நேர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, ‘அய்யோ டொக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே...’ என்று அலறினார் இவர்.

‘நல்லது, இப்ப உங்க நாவிலுள்ள சுவை நரம்புகள் நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாவை எடுங்கள்’ என்றார் பொறியியள் மருத்துவர்.
உண்மையான மருத்துவரும் வேறு வழி இல்லாமல், 500 ரூபாவைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்.

‘டொக்டர், எனக்கு ஞாபகமறதி ரொம்ப அதிகமாயிருக்கு குணப்படுத்துங்க...’ என்றார்.

‘நேர்ஸ் அந்த 8ம் நம்பர் போத்திலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க’ என்றார் பொறியியள் மருத்துவர்.’

‘ஐயோ... டொக்டர், அது மாட்டு மூத்திரம்...’ என்று அலறினார் இவர்.

‘நல்லது.! உங்க ஞாபகசக்தி நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க’ என்றார் பொறியியள் மருத்துவர்.

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்!

‘எனக்கு கண் பார்வை சரி இல்லை. மருந்து தாங்க டொக்டர்’ என்றார்.

‘மன்னிக்கவும் இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய்...’ என்று, நாணயத்தாள் ஒன்றை எடுத்து நீட்டினார் பொறியியள் மருத்துவர்.

‘இது 500 ரூபாய்...’ என்று பதறினார் இவர்.

‘நல்லது! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய்’ என்றார் பொறியியள் மருத்துவர்.
திறமையுள்ளவன் எப்படியும் முன்னேறுவான் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் இந்தக்கதை. இவரைப் போன்று ஏமாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. திறமையை இவர் எப்படிப் பயன்படுத்துகின்
றார் என்று மட்டும் பாருங்கள்.

நன்றி: ஈழமுரசு