அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானம்!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை பெற்று 20,000 மெற்றிக் தொன் சம்பா மற்றும் பாதுகாப்பான அரிசி தொகைக்காக முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24,000 மெற்றிக் தொன் அரிசியை மொத்த பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு களஞ்சிய வசதிகளை தற்பொழுது உணவு ஆணையாளர் நாயகம் திணைக்களம் கொண்டிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சந்தையில் அரிசி விலையை ஸ்திரமான முறையில் முன்னெடுப்பது தொடர்பில் பாதுகாப்பான அரிசி தொகையை கையாள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசிக்கான விலை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதனால் இந்த காலப்பகுதியில் சந்தைக்கு விநியோகிப்பதற்காக அரிசி களஞ்சியப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

08. உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தக சந்தையில் அரிசி விலையை ஸ்திரப் படுத்துவதற்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுத்தல்.

ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பை காணக்கூடியதாக இருப்பதினால் இந்த காலப்பகுதியில் விநியோகத்துக்காக பாதுகாப்பான அரிசி தொகையை முன்னெடுப்பதன் தேவை உண்டு.

24 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாதுகாப்பு தொகையாக முன்னெடுப்பதற்கு தேவையான களஞ்சிய வசதியை தற்பொழுது உணவு ஆணையாளர் திணைக்களம் கொண்டுள்ளது.

அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பான அரிசி தொகையை சதொச ஊடாக சந்தைக்கு அரசாங்கத்தின் உறுதி செய்யப்பட்ட விலைக்கு வழங்குவதன் மூலம் அரிசி விலையை நிலையான மட்டத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லை பெற்றுக்கொண்டு 20,000 மெட்றிக்தொன் சம்பா மற்றும் நாட்டரிசியை கையிருப்பில் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.