அரிசந்திரன் பதில்கள்!

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019

கேள்வி:- தலைவரின் சிந்தனைகள் எல்லாமே சிறந்தவைதான். அந்தச் சிந்தனைகளில் அரிச்சந்
திரனைக் கவர்ந்த சிந்தனை எதுவோ..?பரமானந்தம் கதிரரசன் பொபினி பிரான்ஸ்

பதில்:- ஜோன் பெர்க்கின்ஸ்(John Perkins) குறித்து ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்திய ஞாபகம்.  ‘பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்(Confessions of an Economic Hitman), அமெரிக்கப் பேரரசின் இரகசிய வரலாறு ((The secret history of the American empire)’ போன்ற உலகம் அதிர்ச்சியடைந்த நூல்களை எழுதியவர்.

உலகை அடிமைகொள்ளத் துடிக்கும் அமெரிக்காவின் ஒரு பொருளாதார அடியாளாக இருந்து, ஒரு கட்டத்தில் மனமாற்றம் அடைந்து அமெரிக்க ஆட்சியாளர்களின் சிந்தனைக்கு எதிராக இந்த இரு நூல்களை எழுதி, தனது உயிரையும் பணயம் வைத்து உண்மைகளை உலகிற்கு உரத்துச் சொன்னவர்.

அவரின் மனமாற்றத்திற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், ஒரு சிந்தனையாளனின் ஒற்றைவரிதான் தன்னை அதிரடியாக மனமாற்றியதாக அவரே தனது நூலில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் ஆட்சித் தலைவரை (இவர் இராணுவ ஜெனரலாக இருந்து நாட்டின் அதிபராக மாறியவர்) பொருளாதார நலன்களைக் காட்டி, அமெரிக்க வலைக்குள் வீழ்த்தும் நடவடிக்கைக்காக ஒரு பொருளாதார அடியாளாக இவர் அந்நாட்டிற்கு அனுப்பப்படுகின்றார்.

தன்னுடைய பயணம் அந்த நாட்டை வளப்படுத்தவல்ல, நாசப்படுத்த என்பதைத் தெரிந்துகொண்டே ஜோன் பெர்க்கின்ஸ் அந்த நடவடிக்கையில் இறங்கியிருந்தார். 1972ம் ஆண்டு பனாமாவின் ஆட்சித் தலைவரை சந்திப்பதற்கு அவரது மாளிகைக்குச் சென்றபோது மாளிகையில் வைக்கப்பட்டிருந்த பனாமா அதிபர் ஒமர் தொறியோசின் (Omar Torrijos) பிரமாண்டமான படத்தின்கீழ் அவர் கூறிய வாசகம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்தது.

‘ஒமரின் இலட்சியம் விடுதலை.
இலட்சியத்தை கொல்லும் ஏவுகணை
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’

111

என்பதுதான் அந்த வாசகம். அந்த வாசகம் அந்த நாட்டை நாசமாக்க வந்த ஜோன் பெர்க்கின்சையே மனமாற்றத்திற்கும் உள்ளாக்கும் அளவிற்கும், பின்நாளில் பனாமா அதிபரை நேசிக்கும் அளவிற்கும் காரணமாக இருந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடங்க மறுத்த ஒமர் தொறியோஸ் 1981ம் ஆண்டு விமான விபத்தொன்றில் உயிரிழந்தார். இவர் அமெரிக்கப் புலனாய்வுத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவே இன்று வரை நம்பப்படுகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகள் அத்தனையும் சிறந்தவையாக இருந்தாலும், ஜோன் பெர்க்கின்ஸ் போன்றவர்களை மனம்மாற வைக்கும் அளவிற்கு பனமா அதிபர் கூறிய வாசகத்திற்கு இணையாக ஒரு வாசகம் தலைவராலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்தச் சிந்தனையே அரிச்சந்திரனை அதிகம் கவர்ந்த சிந்தனையாகவும் இருக்கின்றது. அது...

111

‘தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில்
ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும்
உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.’
என்பதுதான்.

உலகின் நான்காவது பலம்பொருந்திய இந்திய இராணுவத்தை எதிரித்துப் போராடியது குறித்து தமிழீழத் தேசியத் தலைவரிடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது ‘வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.’ என்று கூறியிருந்தார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களும் தமிழ் அமைப்புக்களும் தமிழீழத் தேசியத் தலைவரின் படத்திற்கு கீழே ‘தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.’ என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளை தமிழிலும் தாங்கள் வாழும் நாடுகளின் மொழிகளிலும் எழுதிவைத்தால், அங்கு வரும் வேற்று நாட்டவர்கள் அதனைப் புரிந்துகொள்ளவும் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

நன்றி: ஈழமுரசு