அரிய வகை கருப்பு நிற புலி!!

வியாழன் நவம்பர் 05, 2020

இந்தியாவின் தேசிய விலங்காக வங்காள புலி அறியப்படுகிறது.ராயல் பெங்கால் டைகர் என அழைக்கப்படும் இந்த புலிகளின் மஞ்சள் நிற உடம்பில் கருமை நிற கோடுகள் அடர்த்தியாக காணப்படும்.  

இந்த கோடுகள் ஒவ்வொரு புலிக்கும் வேறுபடும்.

வங்காள புலி தவிர்த்து சைபீரியன் புலி உள்ளிட்ட வேறு சில புலியினங்களும் உள்ளன.  

இந்த நிலையில்,ஒடிசாவின் நந்தன்கண்ணன் வனவிலங்கு சரணாலயத்தில் அரிய வகை கருப்பு புலியொன்று தென்பட்டுள்ளது.  

இந்த வகை புலியினங்களின் உடம்பில் வங்காள புலியை விட மிக அதிக அடர்த்தியுடன் கருமை நிறம் கொண்ட கோடுகள் காணப்படும்.

இதன் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.மேற்கு வங்காளத்தின் பன்ஸ்குரா பகுதியை சேர்ந்த சவுமன் பாஜ்பாய் என்ற புகைப்பட ஆர்வலர் தற்செயலாக இதனை கண்டுள்ளார்.  

உடனடியாக தனது கேமிராவை எடுத்த அதனை படம் பிடித்து உள்ளார்.

அவர் பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களை கவனித்து கொண்டு இருந்தபொழுது, திடீரென தோன்றிய புலியை கவனித்து உள்ளார்.  

முதலில்,அவர் பார்ப்பது புலி என்று உணரவே இல்லை என கூறுகிறார்.  

மரங்களுக்கு இடையே இருந்து திடீரென வெளியே வந்து சில வினாடிகள் அமர்ந்திருந்தது.  

அதன் பின்னர் நடந்து மரங்களுக்கு பின்னே சென்று விட்டது என கூறுகிறார்.  

எனினும்,தனது கேமிராவை பயன்படுத்தி ஒரு சில புகைப்படங்களை அவர் எடுத்து உள்ளார்.

ஒடிசாவில் இந்த வகை புலிகள் காணப்படுகின்றன.இவற்றில் கேமிரா பதிவுகளில் கிடைத்த தகவலின்படி,6 முதல் 7 புலிகளே இந்தியாவில் எஞ்சியுள்ளன.  

ஒடிசாவின் சிம்லிபால் புலிகள் சரணாலயத்தில் முதன்முறையாக இந்த வகை புலிகள் கண்டறியப்பட்டன.  

பின்பு 2007ம் ஆண்டு மீண்டும் அவை கண்டறியப்பட்டன.

இதன்பின்னர் சில வருடங்கள் கழித்து நந்தன்கண்ணன் சரணாலயத்தில் பெண் புலி ஒன்று 4 குட்டிகளை ஈன்றது.  

அவற்றில் 2 குட்டிகள் இந்த கருப்பு நிற வகையை சேர்ந்தவை.  இதனை தொடர்ந்து உடனடியாக அவை இரண்டும் முறையாக பராமரிக்கப்பட்டன.  

அவற்றின் வளர்ச்சி சி.சி.டி.வி. கேமிரா கொண்டு கண்காணிக்கப்பட்டது.

இதன்பின் ஓராண்டு கழித்து அவை வெளியிடங்களுக்கு கொண்டு வரப்பட்டன.அவற்றில் ஒரு புலியே சவுமன் எடுத்த புகைப்படத்தில் காணப்படுகிறது.  

மற்றொரு புலி பற்றி எதுவும் தெரியவரவில்லை என அவர் கூறுகிறார்.