ஆரிய,திராவிட மாயையில் இருந்து விலகி நிற்க வேண்டும்!!

திங்கள் நவம்பர் 16, 2020

உரிமைப் பட்டவன் ஒதுங்கிப்போனால் கண்டவர்களும் வந்து  ஆட்டையப்போடுவார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டு ஆரிய, திராவிட மாயையில் இருந்து விலகி நிற்க வேண்டும்.

"எங்கள் தொல்காப்பியம் தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழும் மக்களாக எங்கள் முன்னோர்களைக் குறித்துள்ளது. அதில், எங்கள் ஒவ்வொரு மக்களின் சொந்த நிலமும், அதற்குரிய கடவுளும் குறிக்கப்பட்டுள்ளன.

எம் முன்னோர்கள் அந்த நான்கில் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான தெய்வமும் குறிக்கப்பட்டிருக்கிறது.

எச். இராசா-கே.டி. இராகவன் ஆகியோரின் முன்னோர்க்கு அவ்வாறான உண்மையான தமிழ் நில உரிமை குறிக்கப்பட்டிருக்கிறதா? இல்லை! இவர்களின் முன்னோர்கள் வடக்கே இருந்து வந்த ஸ்மார்த்தர்கள்! கோயில் வழிபாடு இல்லாதவர்கள்! சமற்கிருத சுலோகங்களை ஓதிக் கொள்வோர்.

ஆகமப்படி பார்த்தால்,பிராமண ஸ்மார்த்தர்கள் எங்கள் கோயிலின் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது.

எங்கள் கடவுள்களின் அழகானத் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆரியமயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களை, இவர்களின் முன்னோர்கள் எங்களின் கடவுள்களுக்கு சூட்டினார்கள். அவர்களின் வாரிசுகள் அல்லவா எச். இராசா-கே.டி.இராகவன் வகையறா! உங்களுக்கு எங்கள் இந்துக் கோயில்கள் மீது என்ன உரிமை இருக்கிறது?

ஐந்து ஆறுகள் ஓடக்கூடிய இடம் திருவையாறு! அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக?அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி!அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே,எதற்காக?

கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர்! கருகாத்தநாயகியை கர்ப்பரட்சகாம்பிகா என்று எதற்காக மாற்றினீர்கள்?

தமிழ்க்கடவுள் முருகனை“சுப்ரமணிய”என்று பெயர் மாற்றி தீட்டுக் கழித்து ஆரியமயப்படுத்தியவர்கள் யார்?

கே.டி. இராகவன்-எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள்! அந்த“சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா? இல்லை.

தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திரு. என். நாராயணன் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென அறிக்கை வெளியிடுகிறார்.

அதுவும்,தஞ்சைப் பெருவுடையார் என்றுகூட சொல்ல அவருக்கு மனம் வரவில்லை, பிரகதீசுவரர் என்கிறார்.

இப்படி எங்கள் தெய்வங்களை சூத்திரக் கடவுளாகக் கருதி, “தீட்டுக் கழித்து”, சமற்கிருதத்தில் பெயர் மாற்றுவதன் பொருள் என்ன? இதுதான் கடவுளுக்கும் வர்ணாசிரமம் கற்பிக்கும் ஆரியத்துவா அதர்மம்.

எங்கள் தெய்வங்களின் பெயர்களில் கூட #தமிழ் இருக்கக் கூடாது என சமற்கிருதத்தில் மாற்றிய ஆரியத்தின் வழிவந்த எச். இராசா-கே.டி. இராகவன் போன்றோர்,எந்தத் துணிச்சலில் தமிழ்க் குடமுழுக்கை எதிர்க்கிறீர்கள்? எங்கள் தோளில் அமர்ந்து எங்கள் செவியைக் கடிக்கும் வேலையை அல்லவா,நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

பா.ச.க.வில் வழிமாறிப் போய் சேர்ந்துள்ள அப்பாவித் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ்க் குடமுழுக்கு - தமிழில் வழிபாட்டுரிமை என்று கேட்கிறோம்.

- ஐயா பெ. மணியரசன் அவர்கள்-

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.