ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் - முக்கிய சந்தேக நபர் கைது

சனி மே 21, 2022

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினரான சதா நாலக என்பவரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதான அஷந்த நாலக எனப்படும் சதா நாலக என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது அவர் பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டரில் காலி முகத்திடலுக்கு வந்துள்ளார்.

இவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவரின் உறவினர் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தீப்பிடித்து எரிந்த இராணுவப் பேருந்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் நிறுத்தியவர் இவர் என்பதும் இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இந்த நபர் போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.