ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும் !

வியாழன் டிசம்பர் 26, 2019

வணக்கம் குஞ்சுகள்.
எல்லோருமே கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாக நிற்கிறது எனக்கு விளங்குது. அதுவும் உங்களின்ரை கண்களில் தெரியும் கிறிஸ்மஸ் களை, கவலையை மறந்து நீங்கள் எல்லோரும் இருக்கிறதைக்காட்டுது.

கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அது ஒரு மகிழ்ச்சியான கொண்டாட்ட நாள் தான் பிள்ளையள். அதிலும் வெளிநாடுகளில் வசிக்கிற தமிழர்களுக்கு கிறிஸ்மஸ் என்பது மதங்களைக் கடந்த ஒன்று பாருங்கோ.

பாவத்தில் உழலும் மனிதனை மீட்பதற்காக பூமிக்கு யேசுநாதர் வந்த நாள் இது. இந்த நாள் எல்லோருக்குமே மகிழ்ச்சியான நாள் தான்.

ஆனால் இந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதை விட்டுப் போட்டு எங்கடை ஆட்களில் கொஞ்சப் பேர் குடிச்சு, வெறிச்சுக் கும்மாளமடிக்கிறது தான் எனக்கு வேதனையைத் தருகிறது.

அதிலையும் கிறிஸ்மசைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லிப் போட்டு குடிச்சு, வெறிச்சு வீதிகளில் விழுந்து கிடக்கிறதும், வாந்தியயடுக்கிறதும் இருக்குதெல்லோ? ஒரு புனித நாளில் இதை விடக் கேவலமான செயல் ஒன்றும் இல்லை பிள்ளையள்.

சரி நான் விசயத்துக்கு வாறன்.

அண்டைக்கு கொழும்பில் இருந்து வெளிவருகிற இணையத்தளம் ஒன்றின்ரை செய்தியை வாசிச்சுப் போட்டு நான் அப்படியே தலைசுற்றி விழுந்து போய்விட்டேன் பிள்ளையள். முதலில் என்ரை மகன் எனக்குப் பிறெசர் ஏறிப் போச்சுது என்று நினைச்சுப் பதறிப் போய் விட்டான்.

பிறகு தான் அவனுக்கு விளங்கிச்சுது கொழும்பில் இருந்து வெளிவருகிற இணையத்தளத்தில் வெளிவந்த செய்தியை வாசிச்சுப் போட்டுத் தான் நான் ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டு மயங்கி விழுந்து விட்டேன் என்று.
அப்படி என்ன தான் அந்த இணையத்தளத்தின் செய்தியில் இருந்தது என்று நீங்கள் தலையைப் பிய்த்துக் கொள்கிறது எனக்கு விளங்குது.

அது வேறை ஒன்றும் இல்லை பிள்ளையள்.

சிறீலங்காவின் நீதித்துறையின்ரை சுயாதீனத் தன்மையும், சட்ட ஆட்சியும் கேள்விக் குறியாகும் நிலையில் இருப்பதாக சுவிஸ் தூதரகம் விடுத்த அறிக்கையை செய்தியாக்கிக் குறித்த இணையத்தளம் வெளியிட்ட செய்தியைப் பார்த்துத் தான் நான் மயங்கிப் போனேன் பிள்ளையள்.

பின்னை என்ன பிள்ளையள்?

கொலைகாரனையே கொலையை விசாரிக்கச் சொன்ன மாதிரி, தமிழினத்தை அழிச்ச சிறீலங்கா அரசையே அதன் கொடூரச் செயல்களை விசாரிக்கச் சொல்லி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஏனைய மேற்குலக நாடுகளோடு சேர்ந்து 2015ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிய சுவிற்சர்லாந்து இன்றைக்கு சிறீலங்காவின்ரை நீதித்துறையின்ரை சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகி இருக்குது என்று எச்சரிக்கை செய்யுது என்றால், நிலைமை எங்கை வந்து நிற்குது என்று பாருங்கோவன்.

அதுவும் சும்மா இல்லை பிள்ளையள்.

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சுக் கடைசியாக மனுசனையே கடிச்ச கதையாக, ஊரில் இருந்த எல்லோ
ரையும் வெள்ளை சிற்றூர்தியில் கடத்தித் தன்ரை திருவிளையாடல்களைக் கடந்த காலத்தில் காட்டிய எங்கடை கோத்தபாய மாத்தையா, இந்த முறை தான் ஆட்சிக்கு வந்த கையோடையே சுவிஸ் தூதரகத்தின்ரை உள்நாட்டு அதிகாரி ஒருவரைக் கடத்தி அந்தப் பெண்ணைக் கடுமையாகத் துன்புறுத்தி, அதுவும் பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, தூதரகத்திற்குள் நடக்கின்ற விசயங்களை எல்லாம் தோண்டி எடுத்திருக்கின்றார் என்றால் சும்மாவே?

உதை எல்லாம் ஊடகங்களுக்குத் தெரிவிச்சுத் தனக்கு நிகழ்ந்ததை வெளிக்கொணர்ந்தமைக்காக விசாரணை, அது இது என்று பேய்க்காட்டி கடைசியில் அந்தப் பெண்ணைப் பிடிச்சு சிறையில் அடைச்சுத் தான் எப்படிப்பட்ட மாபியா அதிபர் என்பதை கோத்தபாய காட்டியிருக்கிறார்.

ஆசையிருக்கு தாசில் பண்ண, அம்சம் இருக்கு கழுதை மேய்க்க என்கிற கதையாக, நாட்டை ஆளுகின்ற ஆசை கோத்தபாய மாத்தையாவுக்கு உலகளவுக்கு இருந்தாலும், ஒரு கோவறு கழுதைக்குரிய நாகரீகத்தோடு தான் ஆள் தொடர்ச்சியாகவே நடந்து கொள்கிறார்.

ஐந்து வருசத்துக்கு முதல் மகிந்த ராஜபக்ச என்கிற கழுதையைக் கட்டியிழுக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மேற்குலகம் இப்ப கோத்தபாய ராஜபக்ச என்கிற கோவறு கழுதையை எப்படித் தான் கட்டியாளப் போகுதோ?   

ஆனாலும் பாருங்கோ கோத்தபாய ஒரு கோவறு கழுதை என்பது 2013ஆம் ஆண்டில் பிரித்தானியப் பிரதமராக இருந்த டேவிட் கமரூனுக்குத் தெரிஞ்சிருந்ததாம் பிள்ளையள். பிரதமராகத் தான் இருந்த காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிப் பதிவு செய்த புத்தகத்தில், கோத்தபாய ராஜபக்சவைப் பற்றி மனுசன் நல்லா எழுதவில்லை.

2013ஆம் ஆண்டு கடைசியில் தான் கொழும்புக்கு போய் மகிந்த ராஜபக்சவை சந்திச்ச நேரத்தில் தனக்கு கைலாகு கொடுக்கிறதுக்கு கோத்தபாய கையை நீட்டியதாகவும், ஆனாலும் ஒரு இனவாதியான இவனுக்கு ஏன் கைலாகு கொடுக்க வேண்டும் என்று நினைச்சு அவருக்குத் தான் கைகொடுக்காமல் விட்டதாகவும் டேவிட் கமரூன் எழுதியிருக்கிறார்.

எது எப்படியோ, அப்பன் புளி தின்றால் பிள்ளைக்குப் பல்கூசுமா என்கிற கதையாகத் தான்

சுவிற்சர்லாந்துக்கும், சிறீலங்காவுக்கும் இடையிலான பிரச்சினை இப்ப இருக்குது. ரணில் மாத்தையாவின்ரை ஆட்சியில் கோத்தபாயவுக்கும், மகிந்த குடும்பத்துக்கும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த காவல்துறை தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வாவுக்கு சுவிஸ் அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கிய கோபத்தில், சுவிஸ் தூதரக அதிகாரியை கோத்தபாய கடத்தி விசாரிச்சிருக்கிறார்.

அந்த எரிச்சலில் சுவிஸ் தூதரகம் துள்ளிக் குதிக்க, இது தான் மேற்குலகிற்குப் பதிலடி கொடுக்கிறதுக்கு நல்ல தருணம் என்று இப்ப சுவிஸ் தூதரக உள்நாட்டு அதிகாரியை மறியலில் கோத்தபாய அடைச்சிருக்கிறார்.

ஆனால் இதோடு பிரச்சினை நிற்கப் போகிறதில்லை பிள்ளையள்.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் நிற்காது என்ற கதையாக இனித் தான் நினைச்சபடி தான் கோத்தபாய மாத்தையா நடக்கப் போகிறார்.

ஆற்றில் வெள்ளம் போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும் என்று அந்த நாட்களில் எங்கடை அப்பு, ஆச்சிமார் சும்மாவே சொல்கிறவையள்? இனி ஒவ்வொருத்தராக கோத்தபாய கடத்துவார்.

ஏற்கனவே தனது தமையனின் ஆட்சியில் தான் வழிநடத்திய வெள்ளைச் சிற்றூர்திக் கடத்தல்களை அம்பலப்படுத்திய இரண்டு சாரதிமாரை கோத்தபாய மாத்தையா பிடிச்சு சிறையில் அடைச்சிட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவை அடுத்து ஆள் பிடிச்சு அடைச்சாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ஏற்கனவே யஹல உறுமயவின்ரை முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின்ரை வாகன சாரதியின்ரை மனைவியும், பிள்ளைகளும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கடத்தப்பட்டு மறு நாள் காலை விடுதலை செய்யப்பட்டிருக்கீனமாம்.

இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்ட பொழுது, அவையள் தாங்களாகவே நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு காவல்துறை வாகனம் ஒன்றில் ஏறி மறு நாள் இறங்கினவையள் என்று சிறீலங்கா காவல்துறைப் பேச்சாளர் கொள்கை விளக்கம் கொடுத்தவர் என்றால் நிலைமை எந்தக் கட்டத்தில் இருக்குது என்று நினைச்சுப் பாருங்கோவன்.

வேறை என்ன? அடுத்த முறை நான் உங்களை சந்திக்கும் பொழுது இன்னும் கன திருவிளையாடல்களை கோத்
தபாய அரங்கேற்றியிருப்பார்
வரட்டே?

நன்றி: ஈழமுரசு