ஆஸ்திரேலிய விசா வாங்கித்தருவதாகக் கூறி ஏமாற்றிய சீனப்பெண்ணுக்கு சிறைத்தண்டனை

திங்கள் பெப்ரவரி 15, 2021

 ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக அறியப்பட்ட 38 வயது சீன பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு மோசடியில் ஈடுபட்ட இப்பெண், பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஆஸ்திரேலியாவில் பதிவுச் செய்யப்பட்ட புலம்பெயர்வு முகவரைப் போன்ற வெளியில் காட்டிக்கொண்ட இப்பெண், விண்ணப்பிக்கப்படாத விசா விண்ணப்பங்களுக்கு பலரிடம் கட்டணம் பெற்றிருக்கின்றார். இப்பெண் மோசடியான செயல்பாட்டினால் பலர் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. 

இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைவான ஆங்கிலத் திறன் மற்றும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டம் குறித்து போதிய புரிதல் இல்லாதவர்கள் இருந்திருக்கின்றனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு, 30 வெளிநாட்டவர்களின் கடவுச்சீட்டு இப்பெண்ணின் வசமிருந்து கைப்பற்றப்பட்டது முதல் இவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். ஏனெனில், ஆஸ்திரேலிய சட்டத்தின் படி மற்றொருவரின் கடவுச்சீட்டைக் கொண்டிருப்பது குற்றமாக கருதப்படுகின்றது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2014ம் ஆண்டு  போலி புலம்பெயர்வு முகவராக இச்சீனப்பெண் செயல்படுவதாக சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப்படை விசாரணை நடத்தியிருக்கிறது. 

அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆயிரக்கணக்கிலான ஆவணங்கள், பல தொலைப்பேசிகள், கணினிகள், 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

போலியான உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களைக் கொண்டு குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்கப்பட்டதாகக் கூறி ஏமாற்றியது தொடர்பான ஆவணங்களும் இதில் சிக்கியிருந்தன. 

இது தொடர்பான, வழக்கிலேயே இப்பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் அதிகாரப்பூர்வ புலம்பெயர்வுக்கான முகவராக செயல்பட Migration Agents Registration Authority தரப்பிடம் பதிவுச்செய்வது கட்டாயமாகும்.