ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படும் மலேசியர்கள்!

திங்கள் ஜூலை 08, 2019

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் மலேசியர்கள் பார்வையாளர் விசாவை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாரந்தோறும் சுமார் 20 மலேசியர்கள் ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். 

ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய கணக்குப்படி, ஜுலை 2017 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1,779 மலேசியர்களின் ஆஸ்திரேலிய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சமீப ஆண்டுகளாக, பார்வையாளர் விசாவில் செல்லும் மலேசியர்கள் நீண்ட காலம் ஆஸ்திரேலியாவில் தங்குவதற்காக பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர். சொந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருந்தால் இவ்விசாவுக்கு விண்ணபிக்கலாம். 

குடிவரவுத்துறை அதிகாரிகள் மலேசியர்களுக்கு இவ்விசாவை நிராகரித்தாலும், அம்முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து ஆஸ்திரேலியாவில் தங்குவதை மலேசியர்கள் நீட்டித்து கொள்வதாகக் கூறப்படுகின்றது. அந்த காலத்தில், அவர்கள் தங்குவதற்கும் பணியாற்றுவதற்குமான வாய்ப்பை ஆஸ்திரேலிய சட்டம் வழங்குகின்றது.

1997 முதல் ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய மலேசியர்கள் மின்னணு முறையில் பயண விசாவை பெற அனுமதிக்கப்படுகின்றது. 

கடந்த காலங்களில் குறிப்பாக 1990களில் ஆசிய பொருளாதார நெருக்கடியின் போது பாதுகாப்பு விசா கோரும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த சூழலில், தற்போதைய அதிகரிப்பை குறிப்பிடத்தக்க நிகழ்வாக ஆஸ்திரேலிய அரசு கண்காணிக்கின்றது. 

2014-15 பொறுத்த வரை, பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பதவர்களின் எண்ணிக்கை 1,400 யாக இருந்துள்ளது. அதுவே, 2015-16ல் 3500 யாகவும் 2016-17ல் 8,600 யாகவும் இருந்துள்ளன. இது 2018ல் 9,300 என உயர்ந்துள்ளது. 

வெளிநாட்டினரின் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை எதிர்கொள்ள கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. 

இப்படி விண்ணப்பக்கூடிய 90 சதவீதமானோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விடுவதாகக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.