ஆஸ்திரேலியா: அகதிகளுக்கு வாழ்நாள் தடை?

வெள்ளி ஓகஸ்ட் 23, 2019

ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வந்து, வேறொரு நாட்டில் மீள்குடியேற்றப்பட்டுள்ள அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கும் வகையில் ஆளும் லிபரல் கூட்டணி அரசு சட்ட திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. 

 

கடந்த மாதம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ‘புலம்பெயர்வு சட்ட திருத்த மசோதா 2019’, ஜுலை 19, 2013 பிறகு விசாயின்றி படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த அகதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வழிவகைச் செய்கிறது. இதில் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கும், அம்முகாமிலிருந்து அமெரிக்கா, கனடாவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகளுக்கும் இது பொருந்தக்கூடியதாக இருக்கின்றது. 

 

மனுஸ்தீவில் முகாமில் 5 ஆண்டுக்காலம் சிறைவைக்கப்பட்டு பின்னர் கனடாவில் மீள்குடியேற்றப்பட்ட ஈரானிய அகதி அமீர் டகினியா, ஆஸ்திரேலியாவை பார்வையிட தன்னை நிரந்தரமாக தடை செய்யும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 

இன்றைய நிலையில், மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் 900 அகதிகளும், 950 க்கும் மேற்பட்ட அகதிகள் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள தனக்கு ஆதரவளித்தவர்களையும் நண்பர்களையும் காண விரும்பவதாக ஆஸ்திரேலிய செனட் அவைக்கு கூறியுள்ள அமீர், “நான் குற்றவாளி கிடையாது. இக்கொளகை நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் தண்டிப்படுவார்கள்,” எனத்தெரிவித்திருக்கிறார். 

 

ஆபத்தான படகு பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் விதமாகவே இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது ஆஸ்திரேலிய உள்துறை. 

 

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள இத்திருத்தம் அகதிகள் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என அகதிகள் நல வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.