ஆஸ்திரேலியா ஹோட்டல் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படும் அகதிகள் 

வியாழன் சனவரி 21, 2021

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

இதையடுத்து, இன்று மெல்பேர்ன் ஹோட்டலிலிருந்து 26 அகதிகளை ஆறு மாத இணைப்பு விசா வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர் என தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் உறுதிச் செய்துள்ளது. மேலும் 34 பேர் நாளை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அகதிகள் கடந்த 2019ம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்ட அகதிகளாவர். 

முன்னதாக, இந்த அகதிகள் மெல்பேர்னின் Preston பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த ஹோட்டல் கொரோனா காலத்தில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 

அதே சமயம், இவ்வாறு ஆஸ்திரேலியாவில் வைக்கப்பட்டுள்ள எத்தனை அகதிகளுக்கு இணைப்பு விசா வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது. 

“தடுப்பிற்கான மாற்று இடத்தில் தங்கியுள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சையை நிறைவுச் செய்ய அவர்களுக்கு ஊக்குமளிக்கப்படுகிறது, அதன் மூலம் அமெரிக்காவில் மீள்குடியேறலாம். இல்லையெனில நவுரு, பப்பு நியூ கினியாவுக்கோ அல்லது தாய்நாட்டுக்கோ அவர்கள் திரும்பலாம்,” என ஆஸ்திரேலிய உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இணைப்பு விசா பெறும் ஒரு அகதி, ஆஸ்திரேலியாவில் பணியாற்றவும் மருத்துவ உதவியை பெறவும் அனுமதிக்கப்படுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.