ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையே விசாயின்றி தங்குத்தடையற்ற அனுமதியா?

திங்கள் சனவரி 13, 2020

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதை உறுதிசெய்திருக்கும் ‘பிரக்சிட்’ ஒப்பந்தம் இங்கிலாந்தின் சர்வதேச உறவுகளிலும் பல்வேறு விதமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அந்த வகையில், ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதன் அங்கமாக, இரு நாட்டினரும் விசாயின்றி பயணித்து வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படலாம் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதனை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது. 

இரு நாட்டினரும் வேலை செய்வதற்கான உரிமைகளில் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது உண்மை தான், ஆனால் ‘விசாயற்ற தங்குத்தடையற்ற அனுமதி’ குறித்து பேச்சுவார்த்தையின் போது பேசப்படும் என  தான் சிந்திக்கவில்லை எனக்கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் சைமன் பிர்மிங்கம். 

ஏற்கனவே, ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே விசாயின்றி பயணிக்கவும் வேலை செய்யவும் உரிமை வழங்கும் ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது.  ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்து இடையேயான விவகாரத்தில், இங்கிலாந்து- ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே தங்குத்தடையற்ற இடப்பெயர்வு முக்கிய பிரச்னையாக இருந்து வந்தது. 

இந்த நிலையில், வரும் ஜனவரி 31 அன்று ஐரோப்பிய யூனியனுடனான உடன்பாட்டிலிருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற இருக்கும் நிலையில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது. 

கடந்த 2018ம் கணக்குப்படி, ஆஸ்திரேலியா- இடையேயான வர்த்தக மதிப்பு 26.9 பில்லியன் ஆஸ்.டாலர்களாக உள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவில் அதிகமான வெளிநாட்டு முதலீட்டை செய்யும் இரண்டாவது நாடாக இங்கிலாந்து உள்ள நிலையில் புதியதொரு வர்த்தக ஒப்பந்தம் அவசியமிக்கதாக பார்க்கப்படுகின்றது.