ஆஸ்திரேலியா: வெளிநாட்டினருக்கான புதிய பிராந்திய விசாக்கள்!

திங்கள் அக்டோபர் 07, 2019

ஆஸ்திரேலியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள பிராந்தியா விசாக்கள், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது.

அதே சமயம், பிராந்திய விசாக்கள் மூலம் PR எனப்படும் நிரந்தர வதிவிடம் கோரி விண்ணப்பிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய பகுதியில் மூன்றாண்டுகள் வாழ்ந்ததை நிரூபிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவின் பிரதான நகருங்களுக்கு வெளியே உள்ளவை பிராந்திய பகுதிகளாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறான பகுதிகளில் பணியாற்ற ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், வரும் நவம்பர் மாதம் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கான 2 புதிய பிராந்திய விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

பிராந்திய விசாக்கள்

1. பணி வழங்குபவர்கள் மூலம் திறன்வாய்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா

2. திறன்வாய்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய உள்ளூர் அரசுகள் அல்லது பிராந்திய ஆஸ்திரேலியாவில் பணியாற்ற தகுதியுடைய குடும்ப உறுப்பினர் மூலம் வழங்கப்படும் விசா

இந்த புதிய விசாக்கள் குறித்த முழுமையான விவரங்களை ஆஸ்திரேலிய உள்துறை இன்னும் வெளியிடாத சூழலில்,  பிராந்திய விசா கொண்ட குடியேறியின் நிரந்த வதிவிட விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது அரசு தனிப்பட்ட நபரின் விவரங்களை ஆராயும் என குடியேற்றத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் தெரிவித்துள்ளார். 

புதிய பிராந்திய விசாக்கள் மூலம் ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதியில் வசித்த ஒரு குடியேறி, மூன்றாண்டுகளுக்குப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கோரி விண்ணப்பிக்கலாம். 

“மூன்றாண்டுகளுக்கு பின்னர் குடியேறிகள்  விண்ணப்பிக்கும் பொழுது, வங்கி விவரங்கள், கட்டண விவரங்கள், குடியிருப்பு விவரங்கள் வழியாக மூன்றாண்டுகள் பிராந்திய பகுதியில் வசித்ததை நிரூபிக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் கோலிமன். அப்படி நிரூபிக்காத பட்சத்தில் அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.