ஆஸ்திரேலியாவில் இந்திய குடியேறிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

திங்கள் செப்டம்பர் 14, 2020

 கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்திலிருந்து மீளும் விதமாக, தொழில்கள் மற்றும் திறன்வாய்ந்த வெளிநாட்டினரை ஈர்ப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முதல்கட்ட பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை எதிர்ப்பார்த்துள்ள இந்திய குடியேறிகளுக்கு முன்புப்போல் பெரிய முக்கியத்துவம் கிடைக்காது எனக் கூறப்படுகின்றது. 

தற்போதைய நிலையில், இந்தியாவிலிருந்து தொழில்களையோ திறன்வாய்ந்த குடியேறிகளையோ ஆஸ்திரேலியா எதிர்ப்பார்க்கவில்லை என ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ் தெரிவித்துள்ளார்.

 
முக்கிய சந்தை நாடுகளை கண்டறிவதற்காக ஆஸ்திரேலிய அரசால் உருவாக்கப்பட்ட சர்வதேச பணிக்குழுவின் முடிவில் இந்தியா இடம்பெறாத நிலையில், இப்படியொரு கருத்தினை குடியேற்றத்துறை அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

இந்த பணிக்குழு முதல்கட்டமாக ‘மேம்படுத்தப்பட்ட உற்பத்தி, (advanced manufacturing), நிதி சேவைகள் ( financial services) மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் அதிகம் கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த துறைகளைச் சேர்ந்த குடியேறிகளையே நாங்கள் ஈர்க்க விரும்புவதாகக் கூறியுள்ள குடியேற்றத்துறை அமைச்சர் அலன் டஜ், “அவர்கள் தொழில் முனைவோராக இருக்கலாம், முதலீட்டாளராக இருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாக இருக்கலாம்,” எனக் கூறியுள்ளார். 

முதல் கட்டமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங் காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து  தொழில்களையும் குடியேறிகளையும் ஈர்க்க ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் திறன்வாய்ந்த குடியேறிகளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முக்கிய நாடாக இருக்கும் இந்தியா விடுப்பட்டுள்ளது.