ஆஸ்திரேலியாவில் கொரோனா எல்லைக் கட்டுப்பாடு

திங்கள் மே 25, 2020

 கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டினால், கடந்த மூன்று மாத காலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள், ஆஸ்திரேலியா விசா பெற்றவர்கள் வெளிநாடுகளில் சிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. 

இந்த காலத்தில் 1,905 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் வகையில் பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. 253 பேர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலிய எல்லைப்படையின் கணக்குப்படி, இதில் 801 பேருக்கு கருணையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த அடிப்படையில் விண்ணப்பித்த 195 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  

முன்னதாக, ஆஸ்திரேலிய செனட் விசாரணையில் பேசியிருந்த ஆஸ்திரேலிய எல்லைப்படையின் ஆனையர் மைக்கேல் அவுட்ரம், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலிப்பது கடினமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். 

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளில் இருந்தே வருகின்றனர். அதனால் நமது நாட்டையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிடமிருந்து காக்க வேண்டிய தேவை உள்ளது,” என அவர் குறிப்பிட்டிருந்தார். 

வெளிநாடுகளில் சிக்கியிருந்த பெரும்பாலான ஆஸ்திரேலியர்களுக்கு நாட்டுக்கு திரும்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது, பெரும்பாலானோர் ஏற்கனவே நாட்டிற்கு திரும்பியும் இருக்கின்றனர்.  ஆனால், ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசா பெற்ற இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

துஷஹர் சென், அப்படியானவர்களில் ஒருவர். ஆஸ்திரேலியா தற்காலிக விசா பெற்றுள்ள 26வயது துஷஹர், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் விட்டுவந்த வாழ்க்கைக்கு திரும்ப முயன்று கொண்டிருக்கிறார். ஆனால், பயணத்தடை காரணமாக அவர் தொடர்ந்து புதுதில்லியிலேயே தவிக்க வேண்டிய நிலை உண்டாகியுள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்குக் கோரி அவர் நான்கு முறை விண்ணப்பித்த போதிலும் துஷஹரின் விண்ணப்பம் ஆஸ்திரேலியாவினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

“விலக்குக் கோரும் எனது விண்ணப்பம் ஒவ்வொரு முறை நிராகரிக்கப்படும் போதும், அளவுக்கோலை எட்டவில்லை என்ற ஒரே பதிலையே ஆஸ்திரேலிய உள்துறை எனக்கு வழங்குகின்றது.  ஆனால், என்ன அளவுகோல் என்று தான் தெரியவில்லை,” எனத் தெரிவித்திருக்கிறார் துஷஹர் சென். 

முன்பு ஆஸ்திரேலிய செனட்டில் பேசியிருந்த எல்லைப்படையின் ஆணையர், எந்த அளவுகோலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றது என்ற விவரத்தை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.