ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய அகதி உயிரிழப்பு

புதன் பெப்ரவரி 17, 2021

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற சோமாலியாவைச் சேர்ந்த அகதி ஒருவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உயிரிழந்துள்ளதாக எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

சோமாலிய நாட்டுப் பின்னணிக் கொண்ட அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகவும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம் செயல்பட்ட மனுஸ் தீவில் வாழ்ந்துவந்த இவர் அங்கிருந்து நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டு பின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவின பிரிஸ்பேனுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார். அதன் பின் பெர்த் பகுதிக்கு அனுப்பப்பட்டநிலையில் அங்குவைத்து அவர் மரணமடைந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 8 ஆண்டுகளாக பல இடங்களில் தடுத்துவைக்கப்பட்ட இவர், தனக்கான எதிர்காலத்தை கண்டடையாமலேயே மரணமடைந்துவிட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் கவலைத தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, கடல் வழியாக தஞ்சமடைபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் எனத் தெரிவித்து வருகிறது.