ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இந்தியர்கள்!

ஞாயிறு அக்டோபர் 20, 2019

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க, வேலை செய்ய பெருமளவில் இந்தியர்கள் செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருப்போம். ஆனால், இந்தியர்கள் அகதிகளாகவும் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. 

2018ல் ஆஸ்திரேலியாவில் 51 இந்திய தஞ்சக்கோரிக்கையாளர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரைச் சேர்ந்த நிஷர் அகமது ஹஜி, மீள்குடியேற்றத்திற்கு காத்திருக்கும் அகதியாக நவுருத்தீவில் வசித்து வருகிறார். 

“2009 காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்ட போது, மலேசியாவில் வேலை கிடைப்பது பற்றி யாரோ எனது தந்தைக்கு சொன்னார்கள். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என நினைத்த எனது பெற்றோர், கையில் இருந்ததை எல்லாம் தியாகம் செய்து 2009ம் ஆண்டு என்னை மலேசியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.”  

மலேசியாவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்த நிஷரிடம், ஆஸ்திரேலிய பயணம் குறித்து சிலர் சொல்லியுள்ளனர். அதை நம்பி இந்தோனேசியாவுக்கு படகு வழியாக சென்று, மீண்டும் கிறிஸ்துமஸ் தீவிற்கு (ஆஸ்திரேலிய தீவு) படகு வழியாக செல்லும முயற்சியினை நூற்றுக்கணக்கான அகதிகளுடன் மேற்கொண்டுள்ளார் நிஷர். 

கிறிஸ்துமஸ் தீவில் சிறிது காலம் வைக்கப்பட்ட பின்னர், நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட நிஷர் கடந்த 7 ஆண்டுகளாக எந்த மீள்குடியேற்ற வாய்ப்புமின்றி வாழ்ந்து வருகிறார். 

“இங்கு கல்வி உரிமையோ வேலை செய்வதற்கான உரிமையோ இல்லை,” என்கிறார் நிஷர். நவுருத்தீவில் நிஷர் 7 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீரில் உள்ள தனது பெற்றோரை இழந்திருக்கிறார்.

அதே போல் பஞ்சாபைச் சேர்ந்த ராம் சிங்(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஏஜெண்ட்டின் சொல்லை நம்பி 10 லட்சம் ரூபாய் செலுத்தி இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்றிருக்கிறார். 

இவ்வாறு படகு வழியாக வந்த பல இந்தியர்கள், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்  என்கிறது ஆஸ்திரேலிய அகதிகள் கவுன்சில். 

“இந்தியாவில் இருந்து தஞ்சம் கோருபவர்கள் பெரும்பாலும் குற்றக் கும்பல்களிடம் அச்சுறுத்தலை எதிர்கொள்பவர்கள், அல்லது மத, இனப் பிரச்சனைகளால் வருபவர்கள்,” எனக் கூறுகிறார் அகதிகள் நல வழக்கறிஞரான ஐன் ரிண்டோல்.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக தஞ்சம் அடைபவர்களை முழுமையாக நிராகரித்து நாடு கடத்தி வருகின்றது. 

இந்த சூழலில், விமானம் வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகின்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா அல்லது மாணவர் விசா வழியாக செல்பவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பதற்கான அனுமதி உண்டு. 

ஐ.நா.அகதிகள் ஆணையத்தின் மக்கள் தொகை புள்ளிவிவரப்படி, 2018 தொடக்கத்தில் 2,342 இந்தியர்களும் பிற்பாதியில் 1,920 இந்தியர்களும் பாதுகாப்பு விசா/ மீளாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பத்திருக்கின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, விமானம் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று தஞ்சம் கோருபவர்களின் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றது.