ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு கொரோனா தொற்று

வியாழன் அக்டோபர் 21, 2021

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப் படை உறுதி செய்துள்ளது. 

இந்த ஹோட்டலை தடுப்பிற்கான மாற்று இடமாக ஆஸ்திரேலிய எல்லைப் படை பயன்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்று குறித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். 

இத்தடுப்பில் உள்ள, முஸ்தபா சலா எனும் 23 வயது அகதி சுமார் 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தடுப்புகளில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து அச்சம் கொண்டுள்ளார். 


“என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாக தான் இருப்போம். ஒன்றாக தான் உணவு உண்ணுவோம்…உண்மையில், என்ன செய்வதென்று எங்களுக்கு தெரியவில்லை,” என்கிறார். 


தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் பிரச்சார செயல்பாடுகளின் இயக்குனர் ஜன பவேரோ, இந்த நிலைமை ஏற்படும் என்று தான் நாங்கள் அஞ்சியதாக கூறுகிறார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முயன்றாலும் அங்குள்ள நிலைமைகளில் அது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார். 

அங்குள்ள நெருக்கமான சூழல், சுகாதார பிரச்சினைகள், போதிய தகவல் இல்லாமை, பிற மையங்களில் பணியாற்றும் காவலாளிகள் வருவது போன்ற நிலைமைகளால் தடுப்புக்குள் கொரோனா தொற்று பரவல் ஏற்படக்கூடிய நிலை உள்ளது குறித்து தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் கவலை தெரிவித்துள்ளது.  


இந்த நிலையில், தடுப்புக்குள் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. 


“தடுப்பில் உள்ளவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர், எல்லைப்படையின் பேச்சாளர் குறிப்பிட்டிருக்கிறார். 


அதே சமயம், ஆகஸ்ட் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள 35 சதவீதமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 16 சதவீதமானோருக்கு இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.