ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?

சனி செப்டம்பர் 12, 2020

 ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். 

நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரூ பாய்ண்ட் எனும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த ஹோட்டல் அகதிகளை சிறைப்படுத்தும் தடுப்பிற்கான மாற்று இடமாகவும் அறியப்படுகின்றது. 

இங்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் முஸ்லீம் அகதிகளாக உள்ள போதிலும் அவர்களுக்கு ஹலால் உணவு வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகின்றது. 

“இங்கு வழங்கப்படும் உணவை ஆராய்ந்து பார்த்ததில் இது ஹலால் உணவு இல்லை எனக் கண்டறிந்தோம். பிரிஸ்பேன் கொண்டு வரப்பட்ட முதல் எங்களுக்கு இவ்வாறே உணவு வழங்கப்படுகின்றது,” எனக் கூறியுள்ளார் ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரான அமின் அப்ரவி. 

இந்த சூழலில், ஹலால் சான்று இருந்தால் காண்பிக்கவும் என இந்த தடுப்பிற்கு பொறுப்பாக இருக்கும் Serco நிறுவனத்திற்கு அகதிகள் சவாலிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அகதிகளுக்கு உணவு வழங்குபவர்களை அகதிகள் தொடர்புக் கொண்டிருந்த நிலையில், அகதிகளுக்காக வழங்கப்படும் உணவு ஹலால் சான்று பெற்றதல்ல என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

அதே சமயம், Serco நிறுவனமும் அகதிகளுக்கு வழங்கப்படும் உணவு ஹலால் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உணவிற்கான இறைச்சி ஹலால் சான்று பெற்றவர்களிடமே வாங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய உள்துறையுடனான Serco நிறுவனத்தின் ஒப்பந்தத்தில், தடுப்பில் உள்ள இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு ஹலால் சான்று பெற்ற உணவு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எனது புரிதலின் படி ஒப்பந்தத்தின் சரியாக அவர்கள் பின்பற்றவில்லை என்று நினைப்பதாகக் கூறியுள்ள குவின்ஸ்லாந்த் இஸ்லாமிய கவுன்சிலின் பேச்சாளர் அலி கத்ரி, ஏனெனில் உணவு வழங்கும் இரு நிறுவனங்களும் ஹலால் சான்று கிடையாது எனக் கூறியிருக்கிறார். குவின்ஸ்லாந்த் இஸ்லாமிய கவுன்சில் என்பது ஹலால் உணவை உறுதிச்செய்யும் முக்கிய சான்று வழங்குனராக உள்ளது. 

“எந்த குற்றமும் செய்யாத அவர்களை நீண்ட காலம் அடைத்து வைத்து போதுமான அநீதியை அவர்களுக்கு(அகதிகளுக்கு) இழைத்து விட்டோம். இதில் அவர்களது உணவுத் தேவைகளைக் கூட நாம் வழங்கவில்லை எனில் இது மிகவும் கொடூரமான மன சித்திரவதை,” எனக் கவலைத் தெரிவித்துள்ளார் அலி கத்ரி.