ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வை பாதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்

திங்கள் ஜூலை 13, 2020

 கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லை மூடல் நடவடிக்கையினால், 2019 வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட புலம்பெயர்வு எண்ணிக்கையை எட்டுவது சாத்தியமற்றதாகியுள்ளது என ஒரு குடியேற்ற வல்லுநர் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்கள், நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெறாதவர்களுக்கு ஆஸ்திரேலிய எல்லை மூடப்படுவதாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருந்தார். 

இந்த தொடர் கட்டுப்பாட்டின் காரணமாக ஆஸ்திரேலியாவின் அனைத்து விதமான புலம்பெயர்விலும் முழுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. 

கடந்த மே மாதம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் மொத்த புலம்பெயர்வு எண்ணிக்கை 34,000 ஆக வீழ்ந்திருக்கும் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு, அதாவது 2019ல் இந்த எண்ணிக்கை 210,700 ஆக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் 553,500 ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர், 322,900 ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். புலம்பெயர்வு ஆஸ்திரேலியாவின் 60% மக்கள் தொகை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கொரோனா கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டால் கூட, நலிவடைந்த பொருளாதாரம் காரணமாக 2019ல் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட 270,000 எனும் புலம்பெயர்வு எண்ணிக்கையை அடுத்த பத்தாண்டுகளில் எட்டுவது சாத்தியமற்றது என குடியேற்றத்துறையின் முன்னாள்  துணை செயலாளர் அப்துல் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.